காஷ்மீரில் பாதுகாப்பு குளறுபடி ராகுல் பயணம் திடீர் நிறுத்தம்: போலீசார் யாரும் வரவில்லை என குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நேற்று பாதுகாப்பு குளறுபடியால் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இறுதி கட்டமாக அவரது பயணம் தற்போது காஷ்மீரை அடைந்துள்ளது. ஜம்முவின் பனிஹால் பகுதியில் இருந்து ராகுல் காந்தி நேற்று தனது பயணத்தை தொடங்கினார். அவருடன், காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லாவும் நடைபயணத்தில் பங்கேற்றார். இரு தலைவர்களும், ஜவகர் சுரங்கப்பாதையை காரில் கடந்து காசிகுந்த் பகுதியில் நடக்கத் தொடங்கினர்.

அப்போது அங்கு திடீரென கட்டுங்கடங்காத கூட்டம் கூடியது. கூட்டத்தை கட்டுப்படுத்த உள்ளூர் போலீஸ் யாரும் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மேற்கொண்டு பயணத்தை தொடர வேண்டாம் என ராகுலின் தனிப்பட்ட பாதுகாப்பு குழுவினர் அறிவுறுத்தினர். இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக, அரை கிமீ மட்டுமே நடந்த ராகுல் உடனடியாக குண்டு துளைக்காத காரில் ஏறி புறப்பட்டு சென்றார். நடைபயணம் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக அனந்த்நக் மாவட்டம் கனாபல் தக்கில் தங்கியுள்ள ராகுல் அளித்த பேட்டியில், ‘‘பாதுகாப்பு தரவேண்டியது ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் பொறுப்பு. பாதுகாப்பு குறைபாட்டால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுமாதிரியான குளறுபடி நாளையும் (இன்று), நாளை மறுநாளும் (நாளை) நடக்காது என நம்புகிறோம்’’ என்றார். நாளை ஸ்ரீநகரை அடையும் ராகுல் காந்தியின் பயணம், லால் சவுக் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைப்பதோடு நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி ஸ்ரீநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்று நிறைவுரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

* அரசியல் செய்யக் கூடாது

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுலின் பாதுகாப்பில் குளறுபடி செய்து, தரம் தாழ்ந்த அரசியல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நாம் இந்திரா காந்தி, ராஜிவ்காந்தியை இழந்து விட்டோம். எனவே, ராகுலின் பாதுகாப்பில் இதுபோன்ற அரசியல் விளையாட்டை செய்யக் கூடாது’’ என கூறி உள்ளார்.

* நாட்டின் நிலைமையை மேம்படுத்தவே யாத்திரை

நடைபயணத்தில் உமர் அப்துல்லா கூறுகையில், ‘‘இந்த யாத்திரை ராகுல் காந்தியின் இமேஜை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இன்று நமது ஒன்றிய அரசு, அரபு நாடுகளுடன் நட்பு கொள்கிறது, ஆனால் நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி கூட அமைச்சரவையில் இல்லை என்பதுதான் உண்மை’’ என்றார்.

* போலீஸ் மறுப்பு

காஷ்மீரில் ராகுல் நடைபயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த போலீஸ் ஏடிஜிபி விஜய் குமார் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பனிஹாலில் இருந்து ஏராளமான தொண்டர்கள் திடீரென நடைபயணத்தில் இணைந்தனர். இதைப் பற்றி காங்கிரஸ் தரப்பில் முன்கூட்டி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதே போல நடைபயணம் நிறுத்துவது பற்றியும் எங்களுக்கு தகவல் சொல்லவில்லை. நாங்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தோம். இனிவரும் நடைபயணம் அமைதியான முறையில் நடைபெறும்’ என உறுதி அளித்துள்ளார்.

Related Stories: