மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை ஆன்லைன் கேம், செல்போனுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?

புதுடெல்லி: ‘‘ஒவ்வொரு வீட்டிலும் ‘தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்பட்ட பகுதி’யை நிர்ணயிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் ‘தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத விரதம்’ கடைபிடிக்க வேண்டும்’’ என பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சி 6வது ஆண்டாக நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது: நீங்கள் புத்திசாலிகளா , இல்லை தொழில்நுட்ப சாதனங்கள் புத்திசாலிகளா என்பதை முடிவு செய்யுங்கள். தொழில்நுட்ப சாதனங்கள் உங்களை விட புத்திச்சாலி என நீங்கள் கருதும் போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. அத்தகைய சூழலில் தான் தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை அடியாக்குகின்றன. ஒருவரின் புத்திசாலித்தனம்தான், தொழில்நுட்ப சாதனத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும், உற்பத்தி திறனுக்கு உதவும் கருவியாக மாற்றவும் உதவுகிறது.

என்னை செல்போனுடன் பார்ப்பது மிகவும் அரிது. ஏனென்றால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி உள்ளேன். நீங்களும் தொழில்நுட்பத்தை ஒதுக்காமல், தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்லைன் கேம் விளையாடுதல், சமூக ஊடகங்களில் செயல்படுதல் போன்வற்றிக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள். குறிப்பிட்ட நேரம் ‘தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத விரதம்’ கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ‘தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்பட்ட பகுதி’யை நிர்ணயிக்க வேண்டும்.

இது வாழ்க்கையின் மேம்பட்ட மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். கேட்ஜெட்களுக்கு அடிமையாவதை தவிர்க்கவும் முடியும். கேள்வி கேட்கும் மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்க வேணடும். மாணவர்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும். எனவே, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியபிறகு மாணவர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விரும்பிய இடத்திற்கு செல்ல அனுமதி கொடுங்கள். அவர்கள் சென்று வந்த இடத்தை பற்றி பெற்றோர் எழுதச் சொல்லுங்கள். மாணவர்கள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த மக்களை சந்திக்க ஊக்கவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* குறுக்கு வழி வேண்டாம்

பிரதமர் மோடி கூறுகையில், ‘‘ஏமாற்றுவது ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு தேர்வில் உதவக்கூடும். ஆனால் நீண்ட காலத்திற்கு வாழ்க்கையில் அது உதவாது. குறுக்குவழியை ஒருபோதும் எடுக்க வேண்டாம். கடின உழைப்பே எப்போதும் வாழ்க்கையில் முன்னேற உதவும். தேர்வு முடிவுகள் வாழ்க்கையின் முடிவு அல்ல’’ என்றார். பரிக்‌ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த ஆண்டை விட 15 லட்சம் அதிகமாக இம்முறை 38 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

Related Stories: