குடமுழுக்குகளை தமிழிலேயே செய்வதற்கு விரைவில் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கோவை: ‘குடமுழுக்குகளை தமிழிலேயே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பழநி முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழில் குடமுழுக்கு நடத்த நீதி மன்றம் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தியது. அதன்படி குழு அமைக்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் அவர்களின் அறிவுரையை பெற்று குடமுழுக்குகளை தமிழிலேயே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும். திமுக ஆட்சியில் 282 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. 62 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சிலைகள் சென்னையில் தொழிலதிபர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு சிலைகள் ஒப்படைக்கப்படும். கோயிலுக்கு சொந்தமான 3.54 லட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணி தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு கோயில்களில் 29 யானைகள் உள்ளன. அதில் 26 கோயில்களில் குளியல் தொட்டி, மருத்துவ பரிசோதனை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகளுக்காக நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே யானைகள் புத்துணர்வு முகாம் தேவையற்ற ஒன்றாகிவிட்டது. கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் கட்டுப்பாடுகளுடன் இருக்கும். நாட்டில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியலில் ஏதாவது ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இந்துக்கள் அவர்கள் பக்கம் திரும்புவார்களா? என்று எதிர்பார்க்கின்றனர். இந்த ஆட்சியை தடுமாறாத ஒரு இரும்பு மனிதர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: