அந்த ஒரு லட்சம் ஓட்டு... ரூட்டை மாற்றிய இபிஎஸ் ஓபிஎஸ்சுக்கு செக்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் வேட்பாளரை அறிவிக்கப்போவதாக கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வேட்பாளரை மாற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இத்தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் 1 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கவுண்டர் சமுதாயத்தில் 40 ஆயிரம் ஓட்டு இருக்கிறது. இதனால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் நகர செயலாளராக இருக்கும் மனோகரனும், மாணவரணி நந்தகோபாலும் களத்தில் உள்ளனர். இவர்களில் மனோகரனை தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அதே நேரத்தில் சின்னமும் இல்லாமல், வேட்பாளர் யார்? என தெரியாமல் இரட்டை இலைக்கு சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு ஓட்டுக்கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு 24 பூத் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமியின் பார்வையில்படும் வகையில் ஓட்டுவேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏற்கனவே, ஓபிஎஸ்சும் முதலியார் சமூக ஓட்டை பெற அந்த சமூகத்தை சார்ந்த வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு, ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரின் ஆதரவு கேட்டு வருகிறார். வேட்பாளர் கிடைக்காததாலும், ஓபிஎஸ்சுக்கு செக் வைக்கும் வகையில் இபிஎஸ் தற்போது ரூட்டை மாற்றி உள்ளார்.

* பாஜ சிக்னலுக்காக காத்திருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்: அமைச்சர் உதயநிதி பேச்சு

சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மு.மணிகண்டன் இல்லத்திருமண விழாவை நடத்தி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘மணமக்கள் இருவரும் ஓபிஎஸ்-இபிஎஸ் போல் இருந்து விடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன். சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்கவும் மாட்டார்கள். பேசவும் மாட்டார்கள். ஆனால் ேமாடிக்கு யார் மிகப்பெரிய அடிமை  என்பதில் பெரிய ேபாட்டியே நடக்கும். இப்போது பாஜ சிக்னலுக்காக இரண்டு  பேரும், போட்டி போட்டு கமலாலயத்தில் காத்திருக்கின்றனர். இவர்களை போல் மணமக்கள் இருவரும் தங்களது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் என்ன வேண்டுமோ, கேட்டுப்பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்’ என்று தெரிவித்தார்.

* எம்ஜிஆர், ஜெயலலிதா மாறி இபிஎஸ்சும்...ஓ.எஸ். மணியன் காமெடி

ஈரோடு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘1973ல் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் எம்ஜிஆருக்கு திருப்பு முனையை தந்தது. மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தல் ஜெயலலிதாவுக்கு திருப்பு முனையானது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்புமுனையாக மாறும்’’ என்றார். இதை கேட்ட தொண்டர்கள் யாரோட யார் ஒப்பிடுவது என கமென்ட் அடித்தபடி சென்றனர்.

* பாஜ போட்டியா? ஒன்றிய அமைச்சர் பதில்

ஒன்றிய தரை வழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடுவது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. இதுகுறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநில அரசு இரண்டு இடங்களை தேர்வு செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது.எங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு முடிவு செய்யும். கயத்தாறு அருகே உலகப் போர் காலத்தில் அமைக்கப்பட்ட விமான நிலைய ஓடு தளத்தை பயன்படுத்தி விமானம் இயக்க நிறுவனங்கள் முன் வந்தால் அது குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் விகேசிங் தெரிவித்தார்.

* தோல்வியடைபவர் அதிர்ஷ்டசாலி: எச்.ராஜா புது கண்டுபிடிப்பு

திருச்செந்தூரில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும். எனவே எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார்? என்று தான் தெரிய வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருப்பது குழப்பத்தைதான் தரும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: