யாருக்கு ஆதரவு தருகிறீர்கள் என்பதை உடனே சொல்ல வேண்டும் பாஜவுக்கு எடப்பாடி பழனிசாமி கெடு: உச்ச நீதிமன்றத்தில் திடீர் முறையீடு

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்று உடனடியாக சொல்லுங்கள் என பாஜவுக்கு எடப்பாடி பழனிசாமி கெடு விதித்துள்ளார். அதேநேரத்தில் நடுநிலை வகிக்க பாஜ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதால்  அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோரது தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன.

ஆனால், வேட்பாளரை நிறுத்த முடியாமல் எதிரணியினர் திணறுகின்றனர். அதிமுகவில் எடப்பாடி, ஓ.பி.எஸ் அணிகள் தங்கள் தரப்புக்கு வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதனால், எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பாளரை அறிவிப்பார். அவருக்கு ஆதரவு தரலாம் என்று முடிவு செய்திருந்த பாஜவின் நிலைமை சிக்கலாகி போனது.  பாஜ போட்டியிட்டால் ஆதரவு தரத்தயார் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். பாஜவுக்கு மட்டுமே ஆதரவு என்று புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள் அறிவித்தன. இதனால் தமிழக அரசியலில் புதிய குழப்பங்கள் உருவாகின. எடப்பாடிக்கு ஆதரவு என்ற நிலையை பாஜ மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டது.

பன்னீர்செல்வம் போட்டியிட்டால் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இதனால், எடப்பாடி அணியில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். கடைசியாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்துள்ளனர். முதலில் முடியாது என்று கூறியவரை பிடித்து, அவருக்கு முழு செலவையும் கட்சி ஏற்கும் என்று கூறி சம்மதிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜ தனது முடிவை இன்னும் அறிவிக்காததால், எடப்பாடி அணி வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பாஜவின் தலைமைக்கு எடப்பாடி அணி சார்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் யாருக்கு ஆதரவு என்பதை தௌிவுபடுத்துங்கள் என்று எடப்பாடி தரப்பில் கூறியுள்ளனர். ஆனால் பாஜவோ இரு அணிக்கும் ஆதரவு இல்லை. நடுநிலை வகிக்கப்போகிறோம் என்று முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அப்படி நீங்கள் முடிவு எடுத்தாலும், அதையாவது சீக்கிரம் அறிவியுங்கள். நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டு பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். ஆனால் மோடியோ, அமித்ஷாவோ இன்னும் முடிவை எடுக்காமல் உள்ளனர்.

அதேநேரத்தில் பன்னீர்செல்வம் அணியும் பாஜவின் முடிவுக்காக காத்திருக்கிறது. அவர் வேட்பாளரை தயார் செய்து வைத்துள்ளார். பாஜ போட்டியில்லை என்று அறிவித்து விட்டால் அடுத்த நிமிடமே வேட்பாளரை அறிவிக்க பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். அதேநேரத்தில் இருவரும் போட்டியிடுவதால் இந்த முறை இருவருக்கும் இரட்டை இலை இல்லை என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது.  

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரிமா சுந்தரம், பாலாஜி சீனிவாசன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், ‘‘அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உங்களது அமர்வில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ளது. இதில் எங்கள் தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை வேட்பாளர் படிவத்தில் போடுவதற்கு மற்றும் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து வருகிறது. எனவே இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சில அறிவுறுத்தல் மற்றும் பரிந்துரையுடன் கூடிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கவும், இரட்டை இலை சின்னத்தை எங்களது தரப்புக்கு ஒதுக்கீடு செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் எங்களது இந்த கோரிக்கை மனுவாகவும் தயார் நிலையில் உள்ளது. நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் அதனை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்’’ என தெரிவித்தனர். இதையடுத்து அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள்,‘‘ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ன, உங்களது இந்த முறையீடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டு விட்டதா’’ உள்ளிட்ட விவரங்களை கேட்டார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், ‘‘ வேட்பு மனு தாக்களுக்கு பிப்ரவரி 7ம் தேதி தான் கடைசி தினம் என்றும், இந்த முறையீடு குறித்து எதிர் தரப்பினரிடம் பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் அதன் நகலும் அவர்களிடம் வழங்கப்பட்டு விட்டது’’ என தெரிவித்தார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘அப்படி என்றால் வரும் திங்கட்கிழமை முறையிடுவதற்கான விண்ணப்பங்களை சரியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அன்றைய தினம் மீண்டும் உங்களது தரப்பில் முறையிடுங்கள். இருப்பினும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்குவது குறித்து நாங்கள் பரிசீலனை செய்கிறோம் என தெரிவித்தனர். இதில் நீதிபதிகள் வழங்கிய இந்த உத்தரவைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கை குறித்த புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்றைய தினமே உடனடியாக தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கு, இரட்டை இலை சின்னம் யாருக்கு ஆகியவை தொடர்பான விவகாரத்தில் வரும் 30ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி, ஓ.பி.எஸ் அணி போட்டி உறுதி.

* இதனால் இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்பு.

* பாஜவின் ஆதரவை பெற இரு அணியும் முயற்சி.

* மனுதாக்கல் 31ம் தேதி துவங்க உள்ளது.

Related Stories: