கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை பிப்.3-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து யுவராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல்  மாணவன் கோகுல்ராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். இந்நிலையில், கடந்த 2015 ஜூன் 23ம் தேதி காதலியுடன் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்றபோது அவரை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. கோகுல்ராஜ் உடல் தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; யுவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; தங்களுக்கு எதிராக திரட்டப்பட்டதாக கூறப்படும் ஆதாரங்களை காவல்துறை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும், கோகுல்ராஜின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் பயன்பாட்டில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களையும், அர்த்தநாரீஸ்வரர் கோயில் வீடியோ பதிவான ஹார்ட் டிஸ்க்கையும், நடைமுறைகளை பின்பற்றாமல் காவல்துறை கையாண்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். ஹார்ட் டிஸ்க்கில் இருந்த பதிவுகளை யார் கையாள்வது, யார் எடுக்க சொன்னது, யார் எடிட் செய்வது, யார் அழித்தது என்பது தொடர்பான எந்த விவரங்களையும் காவல்துறை முழுமையாக விசாரிக்கவில்லை என்றும், சிசிடிவி கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவல்துறை தரப்பு வாதங்களை முன்வைக்க வழக்கை பிப்.3-க்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: