திருப்பூரில் பிரமாண்டமாக தொடங்கிய 19-வது புத்தகத் திருவிழா: 150 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்

திருப்பூர்: திருப்பூரில் பிரமாண்டமாக 19-வது புத்தகத் திருவிழா தொடங்கியது. தமிழக அரசு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை  சார்பில் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா காங்கயம் ரோடு வேலன் ஹோட்டல் வளாகத்தில் துவங்கியது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் புத்தக திருவிழாவை துவக்கி வைத்தனர்.

இதில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் பங்கேற்றனர். வரும் பிப்.5-ம் தேதி வரை 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இங்கு 150 அரங்குகளில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. 126 புத்தக விற்பனை அரங்குகள் மற்றும் 24 அரசுத்துறை சார்ந்த அரங்குகள் இடம் பெற்று உள்ளன. தினமும் காலை 11 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்கி இரவு 9:30 மணி வரை நடைபெற உள்ளது.  புத்தக விழாவில்  சூரியன் பதிப்பகம், உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் கண்காட்சியில் பங்கேற்று தங்கள் பாதிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

 அறிவியல், வரலாறு, அரசியல், பண்பாடு, கதை, கவிதை, நாவல், குழந்தை இலக்கியம், சுய முன்னேற்றம், பொருளாதாரம், மனநல உளவியல், ஆன்மீக உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலை கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் மிகச் சிறந்த இலக்கிய பண்பாட்டு ஆளுமைகள் பங்கேற்கின்றனர். புத்தக கண்காட்சி வளாகத்தில் கல்வித் துறை அரங்கில் செல்பி கார்னர் அமைக்கப்பட்டுள்ளது இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கான இடம் மற்றும் பெண்கள் சிறுவர்கள் உட்பட பார்வைகளுக்கான கழிவறை வசதி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: