கிணற்றில் விழுந்த சிறுத்தை பலி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் அம்புரூஸ் வலைவு ஏலமன்னா அருகே கல்கடவு பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான குடிநீர் கிணற்றில் நேற்று காலை சிறுத்தை ஒன்னறு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர் முரளிதரன் சென்று பார்வையிட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் பிதர்காடு வனச்சரகர் அய்யனார் மற்றும் வனவர் பெளிக்ஸ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிறுத்தை உயிருடன் இருந்ததால் பாதுகாப்பு கருதி கூடலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் சிறுத்தை கிணற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் வீரர்கள் கிணற்றில் இறங்கி இறந்த சிறுத்தையை கயிற்றில் கட்டி மேலே கொண்டு வந்தனர். இறந்த பெண் சிறுத்தைக்கு சுமார் 5 வயது இருக்கும் என்றும், இரைதேடி வந்த போது கிணற்றில் தவறி விழுந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.  இதை தொடர்ந்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் ராஜராஜன் ஆகியோர் இறந்த சிறுத்தையை உடல்கூறு பரிசோதனை செய்து வனப்பகுதியில் எரியூட்டினர்.

Related Stories: