குமாரபுரத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கோயில் சுற்றுச்சுவரை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உள்பட்ட குமாரபுரம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு சொந்தமான உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கோயிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவர் அதையொட்டிய தெருவை ஆக்ரமித்து கட்டியுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் வருவாய்த்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில், அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கோயில் சுற்றுச்சுவரை ஆய்வு செய்தனர்.

அப்போது தெருவை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனால் அந்த சுற்றுச்சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கோயிலின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் குவிய தொடங்கினர்.

அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக வடசேரி, ஆரல்வாய்மொழி, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோயில் சுற்றுச்சுவரை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: