புவனகிரி அருகே சி.முட்லூரில் கன்னி திருவிழா; ஆண்கள், பெண்கள் கும்மியடித்து கொண்டாட்டம்: ஊர்வலமாக சென்று சிலைகளை ஆற்றில் கரைத்த மக்கள்

புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கன்னித்திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் இந்த கன்னித்திருவிழா முழு அளவில் நடைபெறவில்லை. இந்த நிலையில் சி.முட்லூர் கிராமத்தில் கன்னித்திருவிழா நேற்று உற்சாகமாக களை கட்டியது. விவசாயம் செழித்து மக்கள் செழிப்புடன் இருக்க வேண்டும். கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பதால் கன்னிகளை தெய்வமாக வழிபடும் இந்த திருவிழா பிரசித்தி பெற்றது.

காணும் பொங்கல் தினத்தன்று கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருமுனைகளிலும் 7 செங்கல் வைத்து அவற்றை கன்னியாக நினைத்து கிராம மக்கள் தினமும் வழிபடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் 9வது நாள் திருவிழா நேற்று முன்தினம் இரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது கன்னி சிலைகளை கொண்டு வந்து ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு ஆண் கன்னி சிலையும், ஒரு பெண் கன்னி சிலையும் வைக்கப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்பட்டு படையல் நடந்தது.

பின்னர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கன்னி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு தெருமுனையிலும் வைக்கப்பட்ட கன்னி சிலைகளை அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும் தலையில் தூக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசம் பார்க்காமல் கும்மி அடித்தும், ஆட்டம் ஆடியும், பாட்டுப்பாடியும் உற்சாகமாக கன்னி சிலைகளுக்கு பின்னால் சென்றனர். பின்னர் ஊரின் எல்லையில் உள்ள வெள்ளாற்றை அடைந்ததும் அங்கு கன்னி சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது சுமார் 25க்கும் மேற்பட்ட கன்னி சிலைகளை இளைஞர்கள் ஆற்றில் கரைத்து வழிபட்டனர். சி.முட்லூர் கிராமம் முழுவதும் உற்சாகம் கரை புரண்ட இந்த திருவிழாவில் ஏராளமான சுற்று வட்டார கிராம மக்களும் பங்கேற்றனர்.

Related Stories: