குமரி முழுவதும் திருட்டு மது விற்பனை செய்த 21 பேர் அதிரடி கைது: 600 மது பாட்டில்கள் பறிமுதல்

நாகர்கோவில்: குமரி முழுவதும் திருட்டு மது விற்பனை செய்த 21 பேர் கைது செய்யப்பட்டனர். குடியரசு தின விழாவையொட்டி நேற்று மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையொட்டி குமரி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனைகள் நடைபெற்றதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப் டிவிஷன் பகுதிகளிலும் நடந்த அதிரடி  சோதனையில் மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

குலசேகரம் காவல் நிலையத்துக்குட்பட்ட நெடுங்குளம் காலவிளை பகுதியில், எஸ்.ஐ. சுகுமாறன் தலைமையில் போலீசார் சோதனையில் இருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவரிடம் நடந்த விசாரணையில் அவர் திருட்டு மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தது, அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவட்டார் காவல் நிலைய பகுதி குட்டக்குழி பகுதியில் நடந்த சோதனையில், சுந்தரராஜ் (72)  என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆற்றூர் சந்திப்பு பகுதியில் நடந்த சோதனையில் பென்னி (57) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து, 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குலசேகரம் காவல் நிலையம் சூரியகோடு அஞ்சுகண்டறை பகுதியில் எஸ்.ஐ. சுகுமாறன் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், அதே பகுதியை சேர்ந்த ராபி (48) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து, 319 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேக்கல் ஆரணிக்காலவிளை பகுதியில் திருட்டு மது  விற்பனை செய்தாக ரமேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து, 55 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தக்கலை காவல் நிலையத்துக்குட்பட்ட புதூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் ஆல்பர்ட் (35) என்பவர் கைது செய்யப்பட்டு, 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தக்கலை மூலச்சல் பகுதியில் திருட்டு மது விற்பனை செய்ததாக ஜோஸ் (38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கடை, இரணியல், குளச்சல் காவல் நிலைய பகுதியிலும் திருட்டு மது விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். மது விலக்கு பிரிவு போலீசாரும் திருட்டு மது விற்றவர்களை கைது செய்தனர். கைதான அனைவரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று நடத்திய  அதிரடி வேட்டையில் சுமார் 600 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: