வேலூர் பாலமதி வனப்பகுதியில் முகத்தை கல்லால் சிதைத்து இளம்பெண் படுகொலை: பலாத்காரம் செய்யப்பட்டாரா?

வேலூர்: வேலூர் அருகே பாலமதி மலை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத இளம்பெண் முகம் சிதைத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலூர் அருகே உள்ள பாலமதி மலையில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதி வழியாக சிலர் இன்று காலை சென்றனர். அங்கு இளம்பெண்ணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதையறிந்த கிராம மக்கள் வேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வனப்பகுதியில் சடலமாக கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 28 வயது இருக்கும். சுடிதார் அணிந்திருந்தார். அவரது முகம் கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டிருந்தது. அவரது கழுத்தில் நகக்கீறல்களும், ரத்தக்காயங்களும் கிடந்தது. இந்த கொலை சம்பவம் நேற்று மாலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், கழுத்தில் நகக்கீறல்கள் இருப்பதால் இவரை யாராவது கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இத்தகவல் அறிந்த எஸ்பி ராஜேஷ்கண்ணனும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். வனப்பகுதியில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: