திருப்பூரில், வடமாநில இளைஞர்கள் சிலரை தாக்குவதாக வெளியான வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மாநகர காவல் ஆணையர் பேட்டி

திருப்பூர்: திருப்பூரில், வடமாநில இளைஞர்கள் சிலரை தாக்குவதாக வெளியான வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிராவின் குமார் அபிநவ் கூறியுள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு டீக்கடையில் ஏற்பட்ட சிறு பிரச்சனை அது, அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் ஆணையர் தெரிவித்தார்.

காவல்துறைக்கு சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை, இருப்பினும் விசாரணை நடைபெற்றது. வதந்திகளை நம்பவேண்டாம், திருப்பூரில் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு உள்ளது என பிராவின் குமார் அபிநவ் கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை உற்பத்தி பிராதான தொழிலாகவுள்ளது. இதற்காக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு தொழிலாளர்கள் தற்போது திருப்பூரில் தங்கி பணியாற்றிவருகின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த 14-ம் தேதியன்று குலையம்பாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பின்னலாடை தொழிற்சாலையில் பணியாற்ற கூடிய வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழக தொழிலார்களுக்கும் இடையே டி கடையில் ஏற்பட்ட சிறிய வாக்கு வாதத்தின் காரணமாக மோதல் ஏற்பட்டது.

அந்த மோதல் தொடர்பான வீடியோ நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து தற்போது திருப்பூர் பகுதிகளில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து திருப்பூரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து மாநகர காவல் ஆணையர் கூறியதாவது:

கடந்த 14-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் தற்போதுவரை புகார்கள் ஏதும் வரவில்லை. குறிப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் ஒருசிலர் இந்த வீடியோவை தவறுதலாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் இந்த வதந்திகளை நம்பவேண்டாம்,  தொடர்ந்து இந்த விடியோவை பரப்பியவர்கள் மீது விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என மாநகர காவல் ஆணையர் பிராவின் குமார் அபிநவ் கூறினார்.

Related Stories: