ராஞ்சியில் இன்று முதல் டி.20 போட்டி: வெற்றியுடன் தொடங்க இந்தியா முனைப்பு; அதிரடியில் மிரட்ட காத்திருக்கும் நியூசிலாந்து

ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 3 டி.20 போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ஹர்திக்பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் சூர்யகுமார் சூப்பர் பார்மில் உள்ளார். இஷான் கிஷன், சுப்மன் கில் ஓபனிங் வீரர்களாக களம் இறங்குகின்றனர். ராகுல் திரிபாதி, தீபக்ஹூடா பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், சிவம் மாவி, வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவர்.

மறுபுறம் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் தலைமையில் களம் இறங்குகிறது. டிவான் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், பின் ஆலென், டேரில் மிட்செல், பிலிப்ஸ் அதிரடியில் மிரட்ட காத்திருக்கின்றனர். பந்துவீச்சில் பிளேர் டிக்னர், இஷ் சோதி, பென் லிஸ்டர், லாக்கி பெர்குசன் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பர். ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து டி.20 தொடரை கைப்பற்றவேண்டிய நெருக்கடியில் உள்ளது. டி.20ல் நம்பர் 1 அணியான இந்தியா, அந்த இடத்தை தக்க வைக்க 2-1 என தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடைசியாக ஆடிய 11 டி.20 தொடர்களில் தொடரை இழக்காமல் வீறுநடை போட்டு வருகிறது. அதனை தக்க வைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

டோனியுடன் கிரிக்கெட் பற்றி பேசுவது கிடையாது

ராஞ்சி வந்த உடனே ஹர்திக் பாண்டியா, டோனியின் வீட்டிற்கு சென்று அவருடன் பழைய பைக்கில் உட்கார்ந்து போஸ் எடுத்து போட்டோ பதிவிட்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் பாண்டியாவிடம், டோனி டிப்ஸ் ஏதாவது கேட்க அவரை சந்தித்தீர்களா என்று கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த பாண்டியா, ``இல்லை நான் டோனியுடன் விளையாடும்போது அவரிடம் கிரிக்கெட் தொடர்பாக நிறைய நுணுக்கங்களை கற்று இருக்கிறேன். இப்போது எல்லாம் நான் அவரை சந்திக்கும் போது வாழ்க்கை குறித்தும் வேறு சில விஷயங்கள் குறித்தும் தான் பேசுகிறேன். கிரிக்கெட் பற்றி நாங்கள் இப்போது பேசுவதே கிடையாது.

கிரிக்கெட் தொடர்பாக ஒரு ஆண்டில் நான் என்னென்ன அவரிடம் கற்றுக் கொள்ள முடியுமோ அத்தனையும் கற்றுவிட்டேன். தற்போது அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள எதுவுமே எனக்கு இல்லை. நாங்கள் தற்போது பல்வேறு நகரங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இதுபோன்று எப்போதாவது தான் டோனியை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும். டோனியின் வீடு இங்கு இருப்பதால் ஓட்டலை விட்டு வெளியேறி அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ஒரு மாதமாக நாங்கள் ஓட்டல் விட்டு ஓட்டலாக அலைந்து கொண்டிருக்கிறோம்’’ என்றார். மேலும் வீரர்களின் அறைக்கு வந்த டோனி, அவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனை வழங்கினார்.

இதுவரை நேருக்கு நேர்...

இரு அணிகளும் இதுவரை டி.20 போட்டிகளில் 22 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 12, நியூசிலாந்து 9 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. ராஞ்சி ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை ஆடி உள்ள 3 டி.20 போட்டிகளில் வென்றுள்ளது. இதில் 2021ல் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கையே தேர்வு செய்யும்.

Related Stories: