மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 14.58 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சேலம்: மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 14.58 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.105.65 கோடி மதிப்பீட்டிலான 291  முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 26,649 பயனாளிகளுக்கு ரூ.221.42 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

 நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் சேலம், மாசிநாயக்கன்பட்டியில் இன்று (27.01.2023) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ. 105.65 கோடி மதிப்பீட்டிலான 291 முடிவுற்றத் திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 26,649 பயனாளிகளுக்கு ரூ.221.42 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இன்றைய தினம் ஒரே நாளில் 26,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்திற்கு நான் பலமுறை வருகைபுரிந்துள்ளேன். ஆனால் அமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக சேலம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மிக பிரம்மாண்டமாகவும், எழுச்சியோடும் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்குக் காரணமாக இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா காலத்தில் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்குக் கூட பொதுமக்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழல் இருந்தபோது மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் 24,43,890 பயனாளிகளுக்கு வீடு வீடாகச் சென்று மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 8,017 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் படிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த மாணவியர்கள் கூட தற்போது கல்லூரி படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு இத்திட்டம் உறுதுணையாக உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முதல் திட்டமான மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 14.58 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, குழந்தைகள் பசியோடு பள்ளிகளுக்கு வரக்கூடாது என்பதற்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் சேலம் மாநகராட்சியில் உள்ள 54 பள்ளிகளில் பயிலும் 5,447 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தினை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 6,815 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் முகவரி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போன்ற பல்வேறு திட்டங்களையும் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரால் சேலம் மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்ட திட்டங்களில் கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கக் கூடிய சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். இதன்படி, அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24.55 கோடி மதிப்பீட்டில் கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாபாளையம் கிராமத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, சேலம் மாவட்டம், கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, பெரியார் பல்கலைக்கழகம் அருகில் இப்பணிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாநகராட்சிப் பகுதியில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.158 கோடி செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல் சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று ரூ.120 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. சேலத்தில் போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி ஏரி, அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர் நிலைகளை ரூ.69 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது.

சேலம் மாநகராட்சியில் ரூ.530 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளும் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், ரூ.20  கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் வடிகால் மற்றும் சாலைகள் ரூ.20.61 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பால் கொள்முதலில் சேலம் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13.12.2022 அன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 6,000 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன புதிய தொழிற்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை திறந்து வைத்தார்கள். சேலம் மாவட்டத்திற்கென இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தும், அதனைச் செயல்படுத்தியும் வருகிறார்கள்.

இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகக் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 23,111 மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ரூ.140.23 கோடி மதிப்பிலான கடனுதவிகளும், மகளிர் திட்டம் சார்பில் 1,584 பயனாளிகளுக்கு ரூ.75.79 கோடி மதிப்பிலான கடனுதவிகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, மகளிர் திட்டம், பள்ளிக் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் என மொத்தம் 26,649 பயனாளிகளுக்கு ரூ.221.42 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்கள்.

முன்னதாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஆரூர்பட்டி ஊராட்சி, வெள்ளக்கல்பட்டி நரிக்குறவர் குடியிருப்புப் பகுதிக்கு ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.105.65 கோடி மதிப்பீட்டிலான 291 பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இ.ஆ.ப., சிறப்புச் செயலாக்கத் திட்ட அரசு சிறப்புச் செயலாளர் எஸ். நாகராஜன், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர்.தா.ப. கார்த்திக்கேயன், இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதம் சிகாமணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மாநகராட்சி ஆணையாளர் தா. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப.,

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா, மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ஹேமலதா விஜயகுமார், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: