சென்னையில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் கடந்த 7 நாட்களில் 17 வழக்குகள் பதிவு: 31 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில்.

காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 20.01.2023 முதல் 26.01.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 குற்றவாளிகள் கைது. 67.9 கிலோ கஞ்சா, 523 டைடல் வலிநிவாரண மாத்திரைகள், 4 கிராம் மெத்தம்பெடமைன், 3 கிராம் ஹெராயின், 4 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள், 1 லோடு வாகனம் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடும்படியாக புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/St.Thomas Mount) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 20.01.2023  மதியம் புழுதிவாக்கம், பாலாஜி நகர் 23வது தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்து அங்கு சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.பிரவீன்குமார், வ/25, த/பெ.தர்மலிங்கம், எண்.161, பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 2.மகேஷ், வ/32, த/பெ.சுப்பிரமணி, எண்.5/32, 5வது பிளாக், கண்ணதாசன் நகர், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 523 டைடல் (Tydol) உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அடையாறு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Adyar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 22.01.2023 அன்று சைதாப்பேட்டை, கலைஞர் வளைவு அருகே கண்காணித்தபோது, அங்கு நின்றிருந்த ஒரு நபரை விசாரணை செய்து அவரை சோதனை செய்தபோது, அவர் ஹெராயின் என்ற போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.  அதன்பேரில் சட்டவிரோதமாக ஹெராயின் வைத்திருந்த தபசுல் இஸ்லாம், வ/25, த/பெ.கலீல் ரஹ்மான், பலிஜின் கிராமம், மொரிஜியன் மாவட்டம், அஸ்ஸாம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிராம் எடை கொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 21.01.2023 அன்றறு ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே டியோ இருசக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து எடுத்து வந்த 1.நிஜாம்கான், வ/31, த/பெ.பாபுபாஸ், பெரிய மலையப்பன் தெரு, டாக்டர் நடேசன் ரோடு, இராயப்பேட்டை, 2.சுந்தரேசன், வ/24, த/பெ.ஈஸ்வரன், மாஸ்லைன் தெரு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.4 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 22.01.2023 அன்று மெத்தம்பெடமைன் போதை பொருள்வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த குற்றவாளிகளான 1.முகமது மஸ்தான், வ/27, த/பெ.ஷேக்தாவூத், எண்.551, 3வது குறுக்குத் தெரு, 7வது தெரு, S.A காலனி, வியாசர்பாடி, சென்னை 2.பர்க்கத் அலி, வ/37, த/பெ.முகமது பாரூக், எண்.7/145, மணல்வாடி தெரு, தேவிபட்டினம், ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிராம் மெத்தம்பெடமைன், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 25.01.2023 அன்று காலை  ஸ்டான்லி ரவுண்டானா அருகே  வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே  சந்தேகத்திற்கிடமாக வந்த Ashok Leyland Dost  லோடு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்து மேற்படி வாகனத்தை சோதனை செய்த போது, வாகனத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது  தெரியவந்தது. அதன்பேரில் லோடு வாகனத்தில் ஆந்திராவிலிருந்து சட்ட விரோதமாக  கஞ்சா கடத்தி வந்த 1.அனில்குமார், வ/24, த/பெ.லாலியா, எண்.630, லட்சுமிபுரம் , கம்பம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் 2.உப்பலப்பட்டி அன்ஜி, வ/34, த/பெ.ராதியா, எண்.5, வெங்கையா நிலையம், மெட்சல், தெலுங்கானா மாநிலம், 3.கொண்டா ரெட்டி, வ/32, த/பெ.மல்லகொண்டையா, எண்.11/697, ஐயப்பன்குடி சர்கில், நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 44 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் 1 Ashok Leyland Dost லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 25.01.2023 அன்று சீனிவாசபுரம், இரயில்வே கேட் அருகே கண்காணித்து அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.துர்கா தேவி, வ/27, க/பெ.துரைராஜ், எண்.33, ராஜீவ்காந்தி நகர், 2வது தெரு, பெரம்பூர், சென்னை என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் துர்கா தேவி அளித்த தகவலின் பேரில் 2.சந்தோஷ், வ/24, த/பெ.சங்கர், எண்.29, மூக்கர் நல்லமுத்து தெரு, மண்ணடி, சென்னை அவரது மனைவி 3.ஆனந்தி (எ) ஹேமா, வ/20, க/பெ.சந்தோஷ், 4.செல்வம் (எ) சிட்டிசன், வ/21, த/பெ.பாபு, எண்.2, மூக்கர் நல்லமுத்து தெரு, மண்ணடி, சென்னை அவரது தாய் 5.உமா, வ/39, க/பெ.பாபு, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புனித தோமையர் மலை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 25.01.2023 காலை எம்.ஜி.ஆர் நகர் காமராஜர் சாலை, டாக்டர் காணு நகர் மெயின் ரோடு சந்திப்பு அருகே கண்காணித்து, சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து வைத்திருந்த சின்னதுரை, வ/35, த/பெ.ராமசாமி, எண்.6/72, 8வது குறுக்குத் தெரு, அன்னை சத்யா நகர், ராமாபுரம், சென்னை  என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2.8 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  

P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 25.01.2023 அன்று, வியாசர்பாடி, முல்லை காம்ப்ளக்ஸ் எதிரில் கண்காணித்து, சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த, 1.தாமஸ், வ/35, த/பெ.ரவி, 3வது பிளாக், உதயசூரியன் நகர், வியாசர்பாடி, 2.தாணு, வ/23, த/பெ.சுரேஷ், பாலகிருஷ்ணன் தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், கொடுங்கையூர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் 1 ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: