×

நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை அறிக்கை எதிரொலி; 2வது நாளாக அதானி குழும பங்குகள் வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு

மும்பை: நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் ெதாடர்பான அறிக்கையை ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டதால், இரண்டாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவை சேர்ந்த பிரபல அதானி குழுமம் கடந்த பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது. வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது’ என்று பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது.

இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.46,000 கோடி அளவிற்கு வேகமாக சரிந்தது. 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி) சொத்து  மதிப்பைக் கொண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் அதானி 3ம் இடத்தில்  இருந்தார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையால், 4ம் இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார். இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது.

இந்தத் தவறான அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள ஹிண்டன்பர்க், ‘அதானி குழுமத்தின் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்று அறிவித்துள்ளது. மேற்கண்ட அடுத்தடுத்த அறிக்கைகளால், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மதிப்பு மேலும் சரிவடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் இந்திய பங்குசந்தையில் அதானி குழும பங்குகள் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன.

இன்றைய பங்குச்சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் 600 புள்ளி அளவிற்கு சரிந்தது. நிஃப்டி 17,800 புள்ளிகளுக்கு கீழே சென்றது. அதானி குழுமத்தின் டோட்டல் கேஸ் பங்குகள் 19.10%, அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 15.8%, அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 3%, அதானி போர்ட்ஸ் பங்குகள் 4%, அதானி பவர் பங்குகள் 5%, அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 15%, அதானி வில்மர் பங்குகள் 5%  அளவிற்கு விலை குறைந்து மேலும் கீழ் நோக்கி சென்றதால் பெரும் பின்னடைவை அதானி குழுமம் எதிர்கொண்டுள்ளது.


Tags : Adani Group ,hindenburg , Financial malfeasance, fake transaction reports echo; Adani Group shares fall for 2nd day: Decision to take legal action against Hindenburg
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...