அதிவேகமாக சென்றதால் விபரீதம்; ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து மருத்துவ கல்லூரி மாணவி படுகாயம்

சென்னை: ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டி வந்த அரசு மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் படுகாயமடைந்த ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வர்ஷூ(22). இவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். தொழிலதிபர் மகளான வர்ஷூ எப்போதும் காரில் தான் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதன்படி கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை வழக்கம் போல் காரில் கல்லூரிக்கு சென்றார்.

மருத்துவ கல்லூரி மாணவி வர்ஷூ தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. வேகத்தின் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த மாணவி வர்ஷூ படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மருத்துவ மாணவி வர்ஷூவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி வர்ஷூ உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஜி.என்.செட்டி சாலையில் இன்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: