யாருக்கு ஆதரவுன்னு உடனே சொல்லுங்க... பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கெடு: உச்சநீதிமன்றத்தில் திடீர் முறையீடு

சென்னை: யாருக்கு ஆதரவுன்னு உடனடியாக சொல்லுங்கள் என பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கெடு விதித்துள்ளார். அதேநேரத்தில் மோடியின் முடிவுக்காக பன்னீர்செல்வமும் காத்திருக்கிறார். அதேநேரத்தில் நடுநிலை வகிக்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதால் இடைத்தேர்தலால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்ேதர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோரது தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன. மின்னல் வேகத்தில் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், எதிரணியில் வேட்பாளரை நிறுத்த முடியாமல் திணறி வருகின்றன. மேற்கு மண்டலம் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வேட்பாளரை அறிவிப்பார்.

அவருக்கு ஆதரவு தரலாம் என்று பாஜக முடிவு செய்திருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக பன்னீர்செல்வம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக கொங்கு இளைஞர் கட்சியின் தலைவர் தனியரசு செயல்படத் தொடங்கினார். அதோடு ஒரு சில சிறிய கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. மேலும், பாஜக போட்டியிட்டால் ஆதரவு தரத்தயார் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனால், பாஜகவுக்கு மட்டுமே ஆதரவு என்று புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள் அறிவித்தன. இதனால் தமிழக அரசியலில் புதிய குழப்பங்கள் உருவாகின. எடப்பாடிக்கு ஆதரவு என்ற நிலையை பாஜக மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டது. பன்னீர்செல்வம் போட்டியிட்டால் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இதனால், எடப்பாடி அணியில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கடைசியாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்துள்ளனர். முதலில் முடியாது என்று கூறியவரை பிடித்து, அவருக்கு முழு செலவையும் கட்சி ஏற்கும் என்று கூறி சம்மதிக்க வைத்தனர். அதனால் அவர் போட்டியிட அரைமனதுடன் ஒப்புக் கொண்டார். ஆனால் பாஜக தனது முடிவை இன்னும் அறிவிக்காததால், எடப்பாடி அணி வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பாஜகவின் தலைமைக்கு எடப்பாடி அணி சார்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் யாருக்கு ஆதரவு என்பதை தௌிவுபடுத்துங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் பாஜகவோ இரு அணிக்கும் ஆதரவு இல்லை. நடுநிலை வகிக்கப்போகிறோம் என்று முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அப்படி நீங்கள் முடிவு எடுத்தாலும், அதையாவது சீக்கிரம் அறிவியுங்கள்.

நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டு பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். ஆனால் மோடியோ, அமித்ஷாவோ இன்னும் முடிவை எடுக்காமல் உள்ளனர். அதேநேரத்தில் பன்னீர்செல்வம் அணியும் பாஜகவின் முடிவுக்காக காத்திருக்கிறது. அவர் வேட்பாளரை தயார் செய்து வைத்துள்ளார். பாஜக போட்டியில்லை என்று அறிவித்து விட்டால் அடுத்த நிமிடமே வேட்பாளரை அறிவிக்க பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். அதேநேரத்தில் இருவரும் போட்டியிடுவதால் இந்த முறை இருவருக்கும் இரட்டை இலை இல்லை என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளராக களத்தில் இறக்குவது தொடர்பாக நிர்வாகிகளை சமாதானப்படுத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார், பண்ணாரி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், மாநகர், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தேர்தல் பணி பொறுப்பாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி அமைவு இடங்கள் குறித்த ஆவணங்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினர். மேலும், தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்படும் பின்னடைவு பற்றி நிர்வாகிகள் எடப்பாடியிடம் விளக்கி கூறினர். அவர்களை சமாதானப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, ‘‘இரட்டை இலை சின்னம் முடங்கியுள்ள நிலையில் இத்தேர்தலில் அதிமுக நிச்சயமாக போட்டியிட வேண்டிய அவசியம் உள்ளது.

இதனால் தகுதியான வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்த நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரிமா சுந்தரம், பாலாஜி சீனிவாசன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உங்களது அமர்வின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் என்ற முறையில் கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.

மேலும், கட்சியின் இடைக்கால பொது செயலாளர் என்பதால் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், எங்களது சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்கவேண்டும். இதுதொடர்பான பரிந்துரையுடன் கூடிய உத்தரவை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். மேலும், எங்களது புதிய கோரிக்கை தொடர்பான மனுவும் தயாராக இருப்பதால், நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் அம்மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இவ்விவகாரம் குறித்து மீண்டும் வரும் 30ம் தேதி எங்களது அமர்வின் முன்னிலையில் முறையிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம் என நீதிபதிகள் கூறியதோடு, உங்களின் புதிய கோரிக்கையை மேல்முறையீட்டு மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு கொடுத்து விட்டீர்களா என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள், இதுதொடர்பான விவரங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். இப்புதிய மனுவின் நகலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என நீதிபதிகள் முன்பு பதிலளித்தனர். இதைத் தொடர்ந்து, வரும் 30ம் தேதி (திங்கட்கிழமை) அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories: