வாலாஜாபாத் பேரூராட்சியில் புறவழி சாலையில் சுற்றி திரியும் மான்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட புறவழி சாலை பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றி திரிகின்றன. இதனால் அந்த மான்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சநிலை உள்ளது. அந்த மான்களை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பேரூராட்சியை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் நாள்தோறும் பணிகள் காரணமாக பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையை தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வாலாஜாபாத், வல்லப்பாக்கம், வெள்ளேரியம்மன் கோயில், வெண்குடி கிராமம் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டான வல்லப்பாக்கம் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வல்லப்பாக்கம் புறவழி சாலை பகுதிகளில் ஏராளமான மான்கள் எந்நேரமும் கூட்டம் கூட்டமாகச் சுற்றி திரிந்து வருகின்றன. இதை கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

எனவே, வல்லப்பாக்கம் பகுதியில் சுற்றி திரியும் மான்கள் பல்வேறு சமூகவிரோதிகளின் கைகளில் சிக்கி பலியாகாமல் இருக்க, இப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு, சுதந்திரமாக சுற்றி திரியும் அந்த மான்களை பாதுகாக்க, அவற்றை பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: