புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் 4 அடிக்கு திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் திடீரென 4 அடி ஆழத்துக்கு ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு நிலவியது. புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு அதிகளவு பயணிகள் வருவதால், பேருந்து நிறுத்தம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனருகே மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில் நேற்று பேருந்து நிறுத்தம் அருகில் சாலையில் 2 அடி அகலம், 4 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் தடுப்பு அமைத்து, திருவொற்றியூரில் இருந்து தண்டையார்பேட்டை, தங்கசாலை நோக்கி சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்னை மாநகராட்சி 4வது மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். திடீர் பள்ளம் ஏற்பட்ட இடம் அருகில் கழிவுநீர் குழாய், மழைநீர் கால்வாய் உள்ளது. இதனால் பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: