கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியின் நகையை திருடியவர் சிக்கினார்

அண்ணாநகர்: சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழரசன் (27). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி இரவு சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, பேருந்து இல்லாததால் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்தபோது, அவரது பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 2 சவரன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி சமையல் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (50) என்பதும், சரிவர வேலை கிடைக்காததால், தனது கூட்டாளியான மோகன் என்பவருடன் சேர்ந்து நகை, செல்போனை திருடியதும், நகையை  கோயம்பேடு பகுதியில் உள்ள அடகு கடையில் அடமானம் வைத்ததும் தெரியவந்தது.  இதையடுத்து, அவரிடமிருந்து 2 சவரன் நகை மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரை கைது செய்த போலீசார்  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிய ஓடிய அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: