8 மணி நேரம் ஆலோசிச்சும் வேட்பாளர் யாருனு தெரியல...ஒருத்தரும் முன்வராததால் விழிபிதுங்கும் எடப்பாடி

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி போட்டியிட முடிவு செய்து, வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இரு அணிகளும் களமறிங்குவதால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இபிஎஸ் அணியில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கே.வி.ராமலிங்கம், தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கி முடியாது என கூறி போட்டியிட மறுத்துவிட்டார். அவரை சமாதானம் செய்யும் வகையில், தேர்தல் செலவுகளை ஏற்பதாக எடப்பாடி ஆசைவார்த்தை கூறினார். இருப்பினும், இடைத்தேர்தலில் போட்டியிட அவர் மறுத்துவிட்டார். இதனால்,  கடந்த ஒரு வாரகாலமாக வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பு திணறி வருகின்றனர்.

யாராவது நில்லுங்கப்பா என்று கெஞ்சி கேட்டும் யாரும் போட்டியிட முன்வரவில்லை. இந்த சூழலில், நேற்று ஈரோட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமி வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில்  ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், விஜயபாஸ்கர், கே.வி.ராமலிங்கம், செம்மலை, அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், பண்ணாரி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், கிழக்கு தொகுதி பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியான தமாகா சார்பில்  விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து  கொண்ட நிர்வாகிகள் செல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கூட்டத்தில் எடப்பாடி பேசுகையில், ‘தற்போதுள்ள சூழலில் வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில் வேறு சின்னத்தில் போட்டியிடும் நிலை வந்தால் அதற்கும் தயாராக இருக்கவேண்டும்’ என்று தெரிவித்து உள்ளார். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மதியம் 2 மணி வரை நீடித்தது. பின்னர் மீண்டும் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது. 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது.

ஆனாலும் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்று 2வது நாளாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், கிழக்கு தொகுதி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது.

Related Stories: