தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. திருமண முகூர்த்த நாட்களில் விலையேற்றத்தால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை ஆண்டு இறுதி வாரத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. 28 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் தங்கம் விலை ரூ.41,040க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தொட்டது. 14ம் தேதி அன்று சவரன் ரூ.42,368 அளவில் விற்கப்பட்டது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி சவரன் ரூ.42,560க்கு விற்கப்பட்டது. 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 21ம் தேதி விலையிலேயே தங்கம் விற்பனையானது. 23ம் தேதி சவரன் ரூ.42,584க்கும், 24ம் தேதி சவரன் ரூ.42,840 என்றும் உயர்ந்தது. நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,380க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,040க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை 43 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது, கடந்த 2020 ஆகஸ்ட் 7ம் தேதி சவரன் ரூ.43,328க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  தங்கம் விலை உயர்வு திருமணம் உள்ளிட்ட விசேஷத்திற்காக நகை வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: