கால்நடைகளை மேய்ப்பதில் எல்லை பிரச்னை: நைஜீரியா குண்டுவெடிப்பில் 54 பேர் பரிதாப பலி

நஸ்ர்வா: கால்நடைகளை மேய்ப்பதில் எல்லை பிரச்னை இருந்த நிலையில், நைஜீரியாவில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 54 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியா நாட்டின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள நஸ்ர்வா மற்றும் பெனு மாநிலங்களுக்கு இடையே பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 40க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நைஜீரியாவின் மியாதி அல்லா கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாசியு சுலைமான் கூறுகையில், ‘ஃபுலானி கால்நடை மேய்ப்பர்கள் குழுவானது, தங்கள் கால்நடைகளை நஸ்ர்வாவுக்கு ஓட்டிக் கொண்டு சென்றது. அப்போது அப்பகுதியை சேர்ந்த மேய்ச்சல் குழு எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து அவர்கள் ஃபுலானி குழுவினரின் கால்நடைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 54 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்’ என்றார்.

ஆனால், நஸ்ர்வா மாநில ஆளுநர் அப்துல்லாஹி சுலே, குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குறித்து இதுவரை தகவல்கள் தெரிவிக்கவில்லை. மேலும் குண்டுவெடிப்பின் பின்னணி குறித்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: