×

முதுமையை முழுமையாக்கும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

முதியோர்களுக்கான ஹெல்த்ஃபுல் டிப்ஸ்

‘‘வெளிய எங்கேயும் போக வேணாம், கீழ விழுந்திடுவீங்க...”
‘‘வீட்டுல இருந்து பசங்கள பாத்துக்கோங்க போதும்.”
‘‘மாடிப்படி ஏறி இறங்கி விழப் போறீங்க... பேசாம ஒரு இடத்துல சும்மா இருங்க...”

இது மாதிரியான பேச்சுகளை இன்று நாம் பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் அதிகம் கேட்கலாம். இருந்தாலும்
முதியவர்களின் உடல் மற்றும் உள நலனை புரிந்து செயல்படும் பிள்ளைகள் நம் நாட்டில் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

ஒருவருக்கு வயது முதிர முதிர அவரது உடலில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று எது என்று கேட்டால் ‘கீழே விழுதல்’ என்று சொல்லலாம். ஏன் வயதானவர்கள் அடிக்கடி கீழே விழுகிறார்கள்? அதனால் வரக்கூடிய பாதிப்புகள் என்ன? தடுக்க என்னென்ன வழிகள் உள்ளது? என பல கேள்விகளுக்கு நாம் இங்கே விடைகள் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதுமையின் உடல் மாற்றங்கள்...

*அறுபத்தி ஐந்து வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் முதியவர்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதனால் அவர்களது இருதயம், மூளை, ஜீரண மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளின் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

* தசைகளின் அடர்த்தி குறையத் தொடங்கும்.

*கண் பார்வை கோளாறு ஏற்படும்.

*உடலின் திடத்தன்மை (Balance) குறைய ஆரம்பிக்கும்.

*மூட்டுகளின் வலிமை குறையத் தொடங்கி, அதனால் முதுகு வலி, கால் மூட்டு வலி, கழுத்து வலி என மூட்டுப் பிரச்சினைகள் வரத் தொடங்கும்.

*ஞாபக மறதி, எதையும் தாமதமாகப் புரிந்து கொள்ளுதல், சின்ன மாற்றங்களுக்கும் மனச்சோர்வு போன்ற மூளை சார்ந்த மாற்றங்கள் ஏற்படும்.

*மூட்டுகளில் தேய்மானம் நிகழும்.

இதனால் அன்றாட வேலைகளை செய்வதில் கடினம் உண்டாகும்.

*சிறுமூளை உடலின் திடத்தன்மையை கட்டுப்படுத்தி ஆளக்கூடியது. எனவே இந்தப் பகுதி செல்களில் வயது முதிர்வால் ஏற்படும் தேய்மானம் போன்றவையால் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

*நாம் படுத்த நிலையில் இருக்கும்போது, ரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருக்கும். ஆனால், திடீரென எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது, ரத்த அழுத்தம் வேகமாகக் குறையத் தொடங்கும். இதனால் நிலை தடுமாற்றம் ஏற்படும். இதுவே வயதானவர்கள் எனில் எளிதில் கீழே விழும் அபாயம் இருக்கும்.

*மூளையிலிருந்து தசைகள், மூட்டுகள் என மற்ற உறுப்புகளுக்கு தகவல் செல்வது தாமதமாக இருக்கலாம்.

தனிச் சிக்கல்கள்...

*ஏற்கெனவே பார்கின்சன் நோய், பக்க வாதம், நடப்பதில் சிரமம் போன்றவை இருந்தால் மேலும் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விழுவதால் விளையும் பாதிப்புகள்...

*இருபது சதவிகிதம் பெரியவர்களுக்கு கீழே விழுவதால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுகிறது.

*மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

இதனால் பக்கவாதம் மாதிரியான பாதிப்புகள் வரலாம்.

*ஒருமுறை விழுந்துவிட்டால் கீழே விழுந்து விடுவோமோ எனும் அச்சத்தால் நன்றாக நடக்கும் முதியவர்கள் கூட நடக்க மறுக்கிறார்கள்.

*கால் விரல்களை அசைக்க முடியாத அளவு இறுக்கமான ஷூக்களை இளமைக் காலத்தில் அணிவதால் முதுமையில் நிலை தடுமாற்றம் வரும் வாய்ப்புகள் உள்ளன என சமீபத்திய ஆய்வுகள் சொல்கிறது.

*இடுப்பு எலும்பிற்கு அடுத்தபடியாக கீழே விழுவதால் தோள்பட்டை, மணிக்கட்டு எலும்புகளில் முறிவுகள் ஏற்படுகிறது.

தீர்வுகள்...

*விழாமல் இருப்பதற்கு மருந்து மாத்திரைகள் என எதுவும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்களும், ஆரம்பம் முதலே இயன்முறை மருத்துவ உடற்பயிற்சிகளும்தான் சரியான தீர்வு.

*நாம் நிற்பதற்கும் நடப்பதற்கும் கண், தசைகள், மூட்டுகள், சிறுமூளை என நான்கு உறுப்புகளும்  ஒருங்கிணைந்து செயல்படும். எனவே, தசைகளையும் மூட்டுகளையும் வலிமைப்படுத்த அவரவர் உடம்புக்கு ஏற்ப இயன்முறை மருத்துவர்கள் உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுப்பார்கள்.

*திடத்தன்மையை அதிகப்படுத்தவும் பயிற்சிகள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

தடுக்கும் வழிகள்...

*இரவு நேரத்தில் கழிவறைக்கு அவசரமாக (சிறுநீர் சிந்திவிடுமோ என) செல்லும் போதுதான் அதிகம் விழுகின்றனர்.

*வருடத்திற்கு ஒருமுறை ‘முழு உடல் பரிசோதனை’ செய்யும்போது கண்களுக்கு பார்வை பரிசோதனையும் செய்து கொள்வது அவசியம்.

*குளியலறை, கழிவறை போன்ற இடங்களில் சொரசொரப்பான தரையை பயன்படுத்துவது நல்லது.

*உயரத்திற்கும், தேவைக்கும் ஏற்ப ஆங்காங்கே கழிவறை, குளியலறையில் கைப்பிடி வைப்பது நல்லது.

*சென்சார் விளக்குகளை பெரியவர்கள் இருக்கும் அறைகளில் பொருத்தலாம்.

*இரவு நேரங்களில் நீர் அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

*தேவையான பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்வது நல்லது.

*ஆரம்பம் முதலே இயன்முறை மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகள் செய்து வந்தால், அடர்த்தியான தசைகளையும், வலுவான எலும்புகளையும் பாதுகாக்கலாம்.

*ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, எப்போதும் படுத்தே இருப்பது என இருக்காமல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும்.

*கால் வலிக்கும், கீழே விழுந்துவிடுவோமோ என பயந்து நிறைய பெரியவர்கள் அவரவர்களின் சொந்த வேலைகளைக் கூட செய்வதில்லை. அப்படியில்லாமல் தன் வேலைகளை தானே செய்து கொள்வது இன்றியமையாதது.

*எப்போதும் வீட்டிலேயே இல்லாமல் பூங்கா, கோயில் என வெளியே சென்று  நேரம் கடத்துவது மனதுக்கும் உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சியாக இருக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையும், இயன்முறை மருத்துவப் பயிற்சிகளும் இருக்கும்போது, முதுமையை எண்ணி இனியும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டாலே போதும் முதுமை முழுமையாகிவிடும்.

தரவுகளின் தகவல்கள்...

* ஒரு வருடத்தில் மட்டும் முப்பது சதவிகிதம் முதியோர்கள் கீழே விழுகிறார்கள். இதில் ஐந்தில் ஒருவருக்கு மருத்துவ கவனம் தேவைப்படுமென்றாலும் பத்தில்  ஒன்றுக்கும் குறைவானவர்களுக்கு கீழே விழுவதினால் எலும்பு முறிவு ஏற்படும்.

* இந்தியாவில் ஏழு கோடிக்கும் மேல் முதியோர் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை  இன்னும் 25 ஆண்டுகளில் 12.5 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

* 1951 ஆம் ஆண்டில் 40 ஆக இருந்த இந்தியர்களின் சராசரி வயது, தற்போது 64 ஆக  அதிகரித்துள்ளது. இதனால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே  காணப்படுகிறது. குறிப்பாக பெண் முதியோர்கள் அதிகம் வாழ்கின்றனர்.

* 2019ல் மட்டும் 35,000 முதியோர்கள் கீழே விழுந்ததனால் இறந்திருக்கின்றனர்.

* நான்கில் ஒரு முதியோர் ஒவ்வொரு வருடமும் கீழே விழுகிறார்கள்.

* தவறி விழும் ஐந்தில் ஒருவருக்கு எலும்பு முறிவு, தலையில் காயம் மாதிரியான  மருத்துவ உதவி தேவைப்படும் காயங்கள் (injury) ஏற்படுகிறது.

* ஒரு  வருடத்தில் குறைந்தது மூன்று லட்சம் முதியோர்கள் தவறி விழுவதனால் ஏற்படும் இடுப்பு எலும்பு முறிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

* 95 சதவிகிதம் இடுப்பு எலும்பு முறிவுகள் ஒரு பக்கமாக கீழே விழுவதால் ஏற்படுகிறது.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Tags :
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!