டீக்கடைகாரர் வங்கிக் கணக்கில் திடீரென ரூ50 லட்சம் வந்தது எப்படி?.. மோசடி கும்பல் குறித்து போலீஸ் விசாரணை

பாட்னா: பீகாரை சேர்ந்த டீக்கடைக்காரரின் வங்கிக் கணக்கில் ரூ. 50 லட்சம் டெபாசிட் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா அடுத்த முன்னா சவுக் அருகே டீக்கடை வைத்துள்ள ராஜூ என்பவர்  வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கினார். அவருக்கு ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜுவின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் வந்தது. ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. அதிர்ச்சியடைந்த ராஜூ, வங்கி நிர்வாகத்தினரை சந்தித்து முறையிட்டார்.

அவர்கள் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் நகர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். மேலும், ராஜூவின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜூவிடம் வங்கிக் கணக்கு தொடங்கி தருவதாக கூறி சிலர் ரூ.2000 பெற்றுள்ளனர். அதற்காக அவர் தன்னுடைய ஆதார் அட்டை, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்துள்ளார்.

வங்கிக் கணக்கு தொடங்கிய பின் ஏடிஎம் கார்டையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். அடுத்த சில நாட்களில் ராஜூவின் வங்கிக் கணக்குக்கு ரூ. 50 லட்சம் டெபாசிட் ஆகியுள்ளது. எதற்காக இவ்வளவு பெரிய தொகை ராஜூவின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: