முத்துப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் குற்றச்செயல் அரங்கேறும் பாழடைந்த வீடுகள் அகற்றப்படுமா?.. பொதுமக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை ரயில் நிலைய குற்றச்செயல்கள் அரங்கேறும் பாழடைந்த வீடுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் நூறு ஆண்டை கடந்த பழமை வாய்ந்ததாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற தர்கா மற்றும் பிரசித்திப்பெற்ற தில்லை ராமர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உட்பட பல்வேறு வழிப்பாட்டு தளங்கள், லகூன் மற்றும் அலையாத்திகாடுகள் உட்பட சுற்றுலா தளங்களால் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும்.

இந்தநிலையில் 12வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று இப்பகுதியில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள பல்வேறு பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய ரயில்நிலையம் கட்டிடம் மற்றும் மீட்டர் பிளாட்பாரமும் அமைக்கப்பட்டு பணிகள் முடிந்து சமீபத்தில் திருவாரூர் காரைக்குடி ரயில் இயங்கி வருகிறது.

இம்மார்க்கத்தில் தொலைதூர ரயில்களும் சென்று வருகிறது. இந்த ரயில்நிலையத்தில் தொலைத்தூர ரயில்கள் நின்று செல்லும் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருவது ஒரு பிரச்னை இருந்து வரும் நிலையில் இந்த ரயில்நிலையம் பகுதியில் பல்வேறு தேவையற்ற கட்டிடங்கள் உட்பட பல பகுதிகளை இடித்து சீரமைப்பு செய்த ரயில்வேத் துறையினர் ரயில்வே பணியாளர்கள் தங்கிய பழமையான வீடுகளை இடித்து அகற்ற வில்லை. இதனால் தற்போது அந்த ஓட்டு வீடுகள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது.

இதில் இப்பகுதியில் வந்து செல்லும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், உள்ளதுடன் குடிமகன்களின் பராகவும், பலருக்கு விபச்சார கூடாரமாகவும் உள்ளது. இதனால் இதனை சுற்றி உள்ள ஏராளமான குடியிருப்பு வாசிகளில் அருவருப்பான சூழலில் வசித்து வருகின்றனர். இரவில் இப்பகுதிக்கு யாரும் வர தவிர்த்து விடுகின்றனர். அருகில் குடியிருப்பவர்களும் பயந்து வசித்து வருகின்றனர். அதனால் இந்த பழமையான வீடுகள் தற்போது பேய் வீடாக மாறிவருகிறதெனவும் அவசரத்துக்கு கூட இப்பகுதியில் நடமாட முடியவில்லை என்று இப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து ரயில்நிலையம் வளாகத்தில் உள்ள இந்த பழமையான பழுதடைந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்களும் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: