ஆப்பிள் விற்று தருவதாக ரூ.26 லட்சம் மோசடி: வியாபாரி கைது

அண்ணாநகர்: சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை தெருவை சேர்ந்தவர் நாசர் (47), தினமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஆப்பிள் பழங்களை பெட்டிகளில் வாங்கி வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (43) என்பவர்  ஜம்மு காஷ்மீரிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாங்கி நாசரிடம் விற்று தரும்படி கொடுத்துள்ளார். ஆப்பிள் பழங்களை வாங்கி விற்பனை செய்து ரூ.6 லட்சம் பணத்தை மட்டும் ராஜேஷ்குமாரிடம் நாசர் கொடுத்து விட்டு மீதி ரூ.26 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட ராஜேஷ்குமார் ரூ.26 லட்சம்  பணத்தை தருமாறு நாசரிடம் பலமுறை கேட்டபோதும் அடுத்த மாதம் தருவதாக கூறிவிட்டு திடீரென அவர் தலைமறைவாகி விட்டார்.  இதனால், அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து நாசரை தேடி வந்தனர். இந்நிலையில்,  நேற்று பழ மார்க்கெட்டுக்கு நாசர் வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மாறுவேடத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டபோது அங்கு வந்த நாசரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Related Stories: