பஸ்சில் சென்றபோது கைவரிசை; ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம், ஒரு சவரன் திருட்டு

பெரம்பூர்: சென்னை செங்குன்றம் பாடசாலை தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (75). இவரது மனைவி சங்கரம்மாள் (70). தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ராஜாமணி ஓய்வு பெற்றவர். சங்கரம்மாளுக்கு கண் சிகிச்சை செய்வதற்காக கடந்த 27ம் தேதி இருவரும் திருச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் திருச்சியில் இருந்து ரயில் மூலம் எழும்பூர் வந்து இறங்கி உள்ளனர். அங்கிருந்து மின்ட் வந்து அங்கிருந்து மாநகர பேருந்தில் (தடம் எண் 57) செங்குன்றத்திற்கு சென்றனர்.

அப்போது, வியாசர்பாடி மார்க்கெட் அருகே பேருந்து வந்தபோது ராஜாமணி வைத்திருந்த கைப்பை திடீரென்று காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பேருந்தை நிறுத்த சொல்லி தேடி பார்த்த போது பை கிடைக்கவில்லை. புகாரின்படி வியாசர்பாடி போலீசார்  விசாரிக்கின்றனர்.  ராஜாமணி கைப்பையில் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், ஒரு சவரன் மதிப்புள்ள மோதிரம், வங்கி பாஸ்புக் போன்றவை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: