ஊட்டி அருகே பயங்கரம்: பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய தோளில் தூக்கி சென்ற வாலிபர்கள்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தேவர்சோலை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் பள்ளிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் மதுபோதையில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். மாணவியை பார்த்த அவர்கள், பாலியல் தொல்லை அளிக்கும் நோக்கத்துடன் சிறுமியை அங்கிருந்து அலெக்காக தூக்கி தோளில் போட்டுக்கொண்டு சென்றனர். சிறுமி பயந்து போய் சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சிறுமியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அருகில் உள்ள எஸ்டேட்டில் பதுங்கி இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணா ஓரான் (30), பாபுலான் ஓரான் (30) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள்தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: