×

புதிய தொழில்நுட்பங்களால் முதியோரை பாதுகாக்கலாம்

நன்றி குங்குமம் டாக்டர்

மூத்த குடிமக்களது எண்ணிக்கையும் மற்றும் அவர்களது பராமரிப்பிற்கான தேவையும் அதிகரித்து வருகிற நிலையில் அவர்களை அக்கறையுடன் பராமரித்துக் கொள்பவர்கள் குறைவாக இருப்பதால், இந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளி வளர்ந்து வருகிற நிலையில் தொழில்நுட்பம் அதை நிரப்புவதற்கு சிறப்பாக உதவக்கூடும்.

முதியோர்களுக்கு தொடர்ச்சியான மேற்பார்வையும், அக்கறையும் அவசியமாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் நாட்பட்ட நோய் பாதிப்பு நிலைகள், ஒன்றுக்கும் அதிகமாக முதியோர்களிடம் காணப்படுகிறது. உடல்பலவீனமும், நோய்நிலையும் இவர்களை எளிதில் பாதிக்கக்கூடியவர்களாக ஆக்கிவிடுகிறது.செயற்கை நுண்ணறிவால் செயல்படும் தொழில்நுட்ப வசதிகளை நிறுவுவது, இவர்களது நகர்வுகளுக்கும், நடமாட்டங்களுக்கும் உதவுகிறது.

ஏதாவது இயல்புக்கு மாறாக நிகழுமானால், அவற்றை இச்சாதனங்கள் கண்டறிந்துவிடும். மிக முக்கியமாக, அவர்களது உடல்நலம் சார்ந்த அம்சங்களை நெருக்கமாக கண்காணித்து பதிவிடுவதன் வழியாக, பாதிப்புகள் வராமல் முன்தடுக்கக்கூடிய உடல்நலப் பராமரிப்பை இத்தகைய தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கின்றன. முதியோர்களுக்கு அவர்களை தொந்தரவு செய்யாமலேயே அவர்களது உடல் இயக்கத்தின் இன்றியமையா அம்சங்களை கண்காணிப்பதற்கு, டோஸி(Dozee) என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு கருவியை சென்னையிலுள்ள மருத்துவ வல்லுநர்கள் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

இது தொலைதூரத்திலிருந்தே நோயாளிகளை தொடர்ச்சியாக கண்காணிக்கும் தொழில்நுட்ப கருவியாக இருக்கிறது. முதியோர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது கூட அவர்களது உடலியக்க இன்றியமையா அம்சங்களை கண்காணிக்கவும், அவற்றைப் பதிவு செய்யவும் இது எங்களுக்கு உதவுகிறது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உடலியக்க இன்றியமையா அம்சங்களின் அறிக்கைகள் உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் டேப்களில் அவைகள் காட்டப்படுகின்றன.

இதன்மூலம் மூத்த குடிமக்களை 24/7 முறையில் கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் எமது அமைவிடத்தைச் சேர்ந்த பணியாளர்கள் திறனுள்ளவர்களாக இருக்கின்றனர். உடலியக்கம் சார்ந்த இன்றியமையா அம்சங்களை கண்காணிக்க இத்தொழில்நுட்பம் உதவுவது மட்டுமின்றி, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் செவிலியர்களை எச்சரித்து உதவிக்கு அழைக்கும் ஒரு எச்சரிக்கை மணியையும் ஒலிக்கச் செய்கிறது.

அச்சத்தை தவிர்த்து பாதுகாப்பாக தாங்கள் இருக்கிறோம் என்ற உணர்வை முதியோர்கள் மனதில் இது உருவாக்குகிறது. அவர்களது தேவைகளை உடனடியாக கவனித்து உதவுவதற்கு செவிலியர் உட்பட, பணியாளர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் இது தருகிறது.எனினும், முதியோருக்கான வாழ்விட அமைவிடத்தில், அவர்கள் தடுமாறி அல்லது வழுக்கி கீழே விழுவதை கண்டறிகிற திறன் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் மிக முக்கிய பங்காக இருக்கிறது.

2018 - ம் ஆண்டில் சிடிசி வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை, வயதான முதியோரில் 4-ல் ஒருவருக்கு கீழே தவறி விழுந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, நகர்வை உணரக்கூடிய சென்சார்களைக் கொண்டு முதியோர்களின் நடமாட்ட செயல்பாட்டு முறையில் இயல்புக்கு மாறானவை ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிவதன் மூலம் கீழே விழும் நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் மற்றும் சுயமுனைப்போடு செயல்படவும் இத்தகைய தொழில்நுட்பக் கருவிகளும், அமைப்புகளும் அவசியமானதாக
மாறியிருக்கின்றன.

முதியோர்கள் தனியாக நேரத்தை செலவிடுகிறபோது, அவர்கள் கீழே விழுவதை கண்டறிய அல்லது விழாமல் தடுக்க, வய்யார் (Vayyar) என்ற ஒரு சாதனத்தையும் பயன்படுத்தலாம். நகர்வை கண்டறிகிற ஒரு சென்சாரைப் பயன்படுத்துவதன் மூலம் இச்சாதனம், முதியவர்கள் கீழே விழும் நிகழ்வை கண்டறிகிறது. கேமராக்கள் இல்லாமலேயே நகர்வுகளை கண்டறிவது இந்த வய்யார் சாதனத்தின் சிறப்பம்சமாகும்.முதியோர்கள் விரும்புகிற சுதந்திரத்தைப் பேணுவதற்கு இது உதவுகிறது.

மூத்த குடிமக்களது வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க அவர்களுக்கு உதவுவதன் மூலம் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு செயற்கை நுண்ணறிவு துணை செய்கிறது மற்றும் மதிப்பை சேர்க்கிறது. இந்த தரவை பரிசீலித்து இங்கு தங்கியிருப்பவர்களுக்குத் தேவைப்படும் பராமரிப்பையும், கவனிப்பையும் சுட்டிக்காட்டுவதற்கு அமைவிடப் பொறுப்பாளருக்கு இவைகள் உதவுகின்றன.

இவ்வாறாக, மூத்த குடிமக்களுக்கான வாழ்விட அமைவிடங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், அங்கு வசிப்பவர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் திறனதிகாரத்தை வழங்குவதாக இருக்கின்றன. முதியோர்களுக்கு உரிய தரமான பராமரிப்பை வழங்க அவர்களை கண்காணிக்கவும் மற்றும் அவர்களுக்கான சேவைகளை உடனடியாகவும், சிறப்பாகவும் வழங்க செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்பங்கள் ஆதரவளிக்கின்றன.

தொகுப்பு - ஜி. ஸ்ரீனிவாசன்

Tags :
× RELATED வெப்பம் தணிக்கும் வெந்தயக்கீரை!