×

ரோகித் - கில் ஜோடி அபார ஆட்டம் ஹாட்ரிக் வெற்றியுடன் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

இந்தூர்: ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. அந்த அணியில் ஷிப்லிக்கு பதிலாக ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் ஷமி, சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டு உம்ரான், சாஹல் இடம் பெற்றனர். கேப்டன் ரோகித், ஷுப்மன் கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி, நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து முதல் விக்கெட்டுக்கு 26 ஓவரில் 212 ரன் சேர்த்தது. ரோகித் 101 ரன் (85 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), கில் 112 ரன் (78 பந்து, 13 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். இஷான் கிஷன் 17, விராத் கோஹ்லி 36, சூரியகுமார் 14, சுந்தர் 9, ஷர்துல் 25 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா 54 ரன் (55 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து டஃபி பந்துவீச்சில் கான்வே வசம் பிடிபட்டார். குல்தீப் 3 ரன் எடுத்து ரன் அவுட்டாக, இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டஃபி, டிக்னர் தலா 3, பிரேஸ்வெல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 386 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 41.2 ஓவரில் 295 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் கான்வே அதிகபட்சமாக 138 ரன் (100 பந்து, 12 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினார். நிகோல்ஸ் 42, டேரில் மிட்செல் 24, பிரேஸ்வெல் 26, சான்ட்னர் 34 ரன் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சில் குல்தீப், ஷர்துல் தலா 3, சாஹல் 2, ஹர்திக், உம்ரான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 90 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ஷர்துல் ஆட்ட நாயகன், கில் தொடர் நாயகன் விருது பெற்றனர். இந்த வெற்றியால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.

* பான்டிங் சாதனையை சமன் செய்தார் ரோகித்
நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் நேற்று தனது 30வது சதத்தை விளாசிய ரோகித், அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் சாதனையை சமன் செய்து 3வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வரிசையில் சச்சின் (49 சதம்), கோஹ்லி (46 சதம்) முதல் 2 இடங்களில் உள்ளனர். கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். ரோகித் - கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 212 ரன் சேர்த்தது, நியூசி. அணிக்கு எதிராக தொடக்க ஜோடி குவித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது.

முன்னதாக, 2009ல் ஹாமில்டனில் நடந்த போட்டியில் கம்பீர் - சேவக் இணைந்து 201 ரன் சேர்த்திருந்தனர். ரோகித் விளாசிய 30 சதங்களில், 28 சதம் தொடக்க வீரராகக் களமிறங்கி அடித்தவை. இந்த வகையில் இலங்கையின் ஜெயசூரியா சாதனையை சமன் செய்து 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் ரோகித். சச்சின் 45 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். ஒருநாள் போட்டிகளில் ரோகித் 273 சிக்சர், 896 பவுண்டரி விளாசி அசத்தியுள்ளார்.


Tags : India ,New Zealand ,Rohit-Gill , India whitewashed New Zealand with Rohit-Gill hat-trick
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்