×

கந்துவட்டி கொடுமை: தம்பதி தற்கொலை

சேலம்: சேலம் அழகாபுரத்தில் கடன் தொல்லையால், கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவரது மனைவி சாந்தி (56). இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த 2000ம் ஆண்டில், ராஜேந்திரன் உள்பட 9 பேர் வாங்கிய லாட்டரியில், ரூ.7 கோடி பரிசு விழுந்தது. அதில், ரூ.1 கோடி ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 5 மணியளவில், ராஜேந்திரனும், சாந்தியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்து அழகாபுரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில், ராஜேந்திரன் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அதை செலுத்த முடியாத நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரிடம் ரூ.19 லட்சம் கடன் வாங்கி வங்கியில் கட்டி வீட்டு பத்திரத்தை மீட்டுள்ளனர். அதை நடேசனிடம் அடமானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக வட்டி மற்றும் அசலை ராஜேந்திரன் திருப்பி தரவில்லை. இதனால் நடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர், வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து வீட்டை எழுதி தரவேண்டும் என ராஜேந்திரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த தம்பதியர் நேற்று முன் தினம் இரவு பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து, தற்கொலை செய்தது தெரியவந்தது.  அவர்கள் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளனர். அதில், தங்களுடைய சாவுக்கு காரணம் நடேசன் மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் உள்பட 6 பேர் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதியிருந்தனர். இதையடுத்து கந்து வட்டி கொடுமை செய்ததாக உலகநாதன், நடேசன் மீது வழக்குப்பதிந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : Usury cruelty: Couple suicide
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...