×

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீதான நடவடிக்கை என்ன?..தொழிலாளர் நலத்துறை செயலர் அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, தொழிலாளர் நலத்துறை செயலர் தரப்பில் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றின் பெயர் பலகைகளை அரசாணைப்படி, தூய தமிழிலேயே வைக்க வேண்டுமென்ற அரசாணையை நிறைவேற்ற ஐகோர்ட் கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே அரசு செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த இடங்களில் உள்ள அனைத்து பெயர் பலகைகளும் அரசாணைப்படி முறையாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் பெயர் பலகைகள் வைப்பது குறித்து தொழிலாளர் நலத்துறையினர் மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘தமிழின் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையாகவும், கடுமையாகவும் பாடுபட வேண்டும். சட்டக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பாட புத்தகங்களை தமிழில் வழங்க வேண்டும். சட்டக்கல்லூரிகளில் வழக்கு தொடர்பான குறிப்பு எடுப்பது தொடர்பான சட்ட புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும். அரசாணையை முறையாக பின்பற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகைகள் வைக்காத தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, தொழிலாளர் நலத்துறை செயலர் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை பிப். 16க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Tamil ,Labor Welfare , What is the action against the companies that do not put up the name board in Tamil?..Labour Welfare Secretary ordered to report
× RELATED 2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த...