×

சருமத்தை பாதுகாப்பது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர்

கோடை காலத்தில் வெளிச்சமும் வெப்பமும் அதிகமாக இருப்பதால் பிரத்யேகமான சில சரும பிரச்னைகள் ஏற்படும். நம் உடலின் வெப்ப நிலையை சரியான முறையில் வைத்துக் கொள்ள வியர்வை சுரப்பி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

வெயில் காலத்தில் அதிக வியர்வை சுரக்கும்போது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள அழுக்கு, பாக்டீரியா போன்றவைகள் வியர்வை சுரப்பியின் நாளங்களை அடைத்து விட்டால் வியர்க்குரு உருவாகிறது. நைலான் ஆடைகள், எலாஸ்டிக் பெரியதாக இருக்கும் உள்ளாடைகள் மிகவும் இறுக்கமான ஆடைகள், ஜீன்ஸ், டைட்ஸ் போன்றவற்றை அணியும் பொழுது வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வியர்க்குரு மிக அதிகரித்து தோல் சிவந்து எரிச்சலும் அரிப்பும் ஏற்படுகின்றன.

வியர்க்குருவை தவிர்க்க...

வெயில் குறைந்த அல்லது குளிர்ச்சியான இடத்தில் இருத்தல், தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், எலாஸ்டிக் நைலான் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை வெயில் காலத்தில் தவிர்த்தல், இரண்டு வேளை குளித்தல், வெந்நீர் குளியலை கோடை காலத்தில் தவிர்த்தல்.

சிகிச்சை என்ன?

கேலமின் லிக்விட் பாரஃபின் கலந்த லோஷனைதடவினால் சருமத்துக்கு இதமாக இருக்கும். மிகவும் வீரியம் இல்லாத ஸ்டீராய்ட் க்ரீமை சில நாட்களுக்கு தடவலாம். சீழ் பிடித்து இருந்தால் ஆண்டிபயாடிக் க்ரீமும் தேவைப்படும்.

வெயில் அலர்ஜி

சிறுவயதிலிருந்தே நம் முகம். கழுத்து. கை போன்ற இடங்கள் வெயில் பட்டு வளர்வதால் பொதுவாக ஒன்றும் ஆகாது. இதை Hardening of skin என்று சொல்வோம். சூரியனிலிருந்து Visible bright lightமட்டுமல்லாது கண்களுக்குப் புலப்படாத புற ஊதாக் கதிர்களும் வெளிவரும். இதில் ஏ. பி. சி என்ற வகைகள் உள்ளது. ஓசோன் லேயர் மற்றும் வளிமண்டலம் ஓரளவு இந்த கதிர்களை வடிகட்டினாலும் பெரும்பான்மையான ஏ வகை புற ஊதா கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. புற ஊதாக் கதிர்கள் சருமத்தில் படும்போது சருமத்துக்கு நிறம் கொடுக்கும் மெலனின் அளவு அதிகரிக்கும். அதனால்தான் வெயில் பட்டால் தோல் கருப்பாகி விடும்.

அதேபோல் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கும் Langerhan செல்லின் அளவு பொதுவாக வெயில் பட்டால் குறையும். அப்படி குறையாமல் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் அந்தசெல்லின் அளவு அதிகரித்தால் வெயில் தோலில் படும்போது ஒருவித அலர்ஜி ஏற்படும். இதை Polymorphic Light Eruption என்று அழைப்போம். இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் முன்னங்கையில் சின்ன சின்ன கட்டிகள் அதாவது ஒரு குண்டூசியின் மண்டை அளவு பளபளவென்று உருவாகும். முன்னங்கை மட்டுமில்லாமல் முதுகிலும் இதுபோன்று உருவாகலாம். இவ்வாறு அலர்ஜிதன்மை ஏற்பட்டவர்களுக்கு சில நிமிடங்கள் வெளியில் நின்றாலும் ஏற்படும். எடுத்துக்காட்டாக மாடியில் உள்ள துணியை எடுக்க செல்லும் அந்த சில நிமிடங்களில் கூட அலர்ஜி ஏற்படும்.

தவிர்ப்பதற்கான வழிகள்

சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். அதுவும் SPF குறைந்தது 30 ஆக இருக்க வேண்டும். Broad spectrum sunscreen என்பது UV A மற்றும் UV B கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்கும். ஆனால், விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல் சன்ஸ்கிரீன் போட்டால் மட்டுமே முழுமையாக சருமம் பாதுகாக்கப்படாது. முழுக்கை சட்டை அணிவது, தொப்பி (சச்சின் டெண்டுல்கர் அணிவது போல் Broad brimmed Hat) அணிவது போன்றவை கூடுதல் பாதுகாப்பு கொடுக்கும்.

இதைத் தவிர கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் இந்த சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்யும் தன்மை உடையது. அதனால் கேரட் சாப்பிடுவது நல்லது. கேரட் மட்டுமல்லாமல் நீர்ச்சத்துள்ள பழங்கள் காய்கறிகள், நிறைய தண்ணீர் குடிப்பது, இளநீர் மற்றும் நுங்கு சாப்பிடுவது கோடை காலத்தில் தோலுக்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது.    

Tags :
× RELATED கண்ணைக் கட்டிக்கொள்ளாதே