×

நுரையீரலின் தசை அழற்சி

நன்றி குங்குமம் டாக்டர்

ஏனைய காயங்கள் காரணமாக நமது சருமத்தில் வடுக்கள் ஏற்படுவதுபோல், நுரையீரலிலும் வடுக்கள் ஏற்படும். இதனால் திசுக்கள் தடிமனாகி ரத்தத்துக்கு பிராணவாயு சீராகக் கிடைப்பது பாதிக்கப்படும். இது மூச்சுத் திணறலுக்கு வழி வகுப்பதால், நடத்தல் உள்ளிட்ட எளிமையான செயல்களைக் கூடசெய்ய இயலாமல் போகும்.திசு தடிமனாதல் நுரையீரல் தசை அழற்சி (Pulmonary Fibrosis) என குறிப்பிடப்படுகிறது. இந்தியா உள்பட உலகம் முழுவதும், இடைநிலை நுரையீரல் நோயின் (Interstitial lung disease) பொதுவான வடிவம், காரணம் தெரியாத நுரையீரல் தசை அழற்சி (Idiopathic pulmonary fibrosis) என்று கண்டறியப்பட்டுள்ளது.

நுரையீரல் தசை அழற்சி நோயாளிகளுள் 44% புகை பிடிப்பவர்கள் எனினும் சிலருக்குக் குடும்ப ரீதியாகவும் நுரையீரல் தசை அழற்சி இருக்கும். நுரையீரல்களுக்கு ஏற்படும் சேதத்துக்கு சிகிச்சை கிடையாது. ஆனால், நுரையீரல் தொடர்பான சிகிச்சை மற்றும் மருந்துகள் வாழ்க்கைத் தரத்தில் சில முன்னேற்றங்கள் வழங்கலாம். கடுமையான நுரையீரல் தசை அழற்சி நோயாளிகளுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இப்போது நம்பிக்கை தருகிறது. இருப்பினும், நுரையீரல் தசைகளில் வடுகள் ஏற்படுவதை கீழ்க்காணும் எளிய முறைகள் மூலம் தடுக்கலாம்.

புகை வேண்டாம்

இது மிக எளிதாகப் புரியக் கூடிய விஷயமே.நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், அதை இன்றே, இப்போதே நிறுத்திவிடுங்கள். நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD),  நுரையீரல் திசுக்களுக்குச் சேதம், சரும ஆரோக்கியம் பாதிப்பு, வாய் துர்நாற்றம் ஆகியவற்றுக்குப் புகை பிடித்தலே முக்கியக் காரணமாகிறது.

மாசுகளைத் தவிர்த்தல்

பரபரப்பான நகரங்களில் மாசுவைத் தவிர்ப்பது சிரமமான செயல். இருப்பினும் வீடுகளில் ஈரப்பதத்தில் வளரும் நுண்ணுயிரிகள் மற்றும் ரேடியம் வாயு கதிர்வீச்சு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடுமையான ரசாயனப் பொருள்கள் உங்கள் நுரையீரல்களைப் பாதிக்காமலிருக்க முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

தடுப்பு மருந்துகள்

ஃப்ளூ மற்றும் நிமோனியா தடுப்பூசிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பில் சிறப்பாகச் செயல்படுவதுடன், நம்மை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். தவிர்க்கக் கூடிய நோய்களால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும்.

தேவை உடற்பயிற்சி

தினசரி 30 நிமிடங்கள் வாரத்தில் 4 நாட்கள் உடற்பயிற்சி செய்தால் நுரையீரல்களின் குருதியேற்றம் சிறப்பாக மாறுவதுடன், ஆழமாக மூச்சு விடுவதையும் உறுதிப்படுத்தும். கதிர்வீச்சுகளைத் தவிர்த்தல் கதிர்வீச்சுகள் திசுக்களைச் சேதப்படுத்துவதால் அவற்றைத் தவிர்த்தல் நலம். இதேபோல் புறாக்களின் கழிவுகளில் உள்ள அமோனியா மூச்சுக் குழாய்க் கோளாறுகளுக்குக் காரணமாகும். நகரங்களில் புறா வளர்க்கும் பழக்கமுடையோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சில மருந்துகள்

ப்ளியோமைசின், சைக்ளோஃபாஸ்மைட், அமியோடரோன், ப்ரோகைனமைட், பெனிசிலாமைன், தங்கம் (துகள்), நைட்ரோஃப்யூரண்டாயின் மற்றும் சிலிக்கா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். முடக்கு வாதம், குடல் அழற்சி நோய் ஆகியவற்றுக்கு மருந்து உட்கொள்ளும் நோயாளிகளும், கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும், ஐபிஎஃப் பாதிப்பு உயர் அபாய கட்டத்தில் இருப்பார்கள்.

கோவிட் 19 கொள்ளை நோய் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதிப்படுத்துங்கள். நமது நுரையீரல்களின் மீது கோவிட்-19 கொள்ளை நோயின் நீண்ட கால பாதிப்பு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்நிலையில், கோவிட் முதல் இரண்டு அலைகளின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல்களில் தடிமனும், வடுக்களும் காணப்பட்டன. அதனால் ஜாக்கிரதையாக இருப்பதுடன் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்கவும்.  
 
தொகுப்பு - எஸ்.கே.பார்த்தசாரதி

Tags :
× RELATED வெப்பம் தணிக்கும் வெந்தயக்கீரை!