முடி உதிர்வுக்கு பிஆர்பி சிகிச்சை...

நன்றி குங்குமம் டாக்டர்

இன்று மனிதர்களில் தலைக்கு மேல் இருக்கும் பல பிரச்னைகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது முடி உதிர்வு. இதில் மருத்துவ ரீதியான கணக்கின்படி வயது வந்தவர்கள் ஒரு நாளில் 75 முதல் 125 முடிகள் வரை இழக்கிறார்கள். அவற்றில் சில முடிகள் வளர்ச்சியின்றி, அப்படியே நின்று விடுவதும் உண்டு. சில முடிகள் மட்டும் புதிதாக முளைப்பதும் உண்டு. இந்தச் செயல் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிற வரை கூந்தல் உதிர்வதும் திரும்ப முளைப்பதும் தொடரும்.

இந்த இயக்கத்தில் ஏதேனும் கோளாறுகள் வந்தால் முடி உதிர்வு நிரந்தரமாகும். கூந்தல் உதிர்வுக்கான மிக முக்கிய காரணங்களில் மன அழுத்தமும் சூழல் மாசும் தவிர்க்க முடியாதவை. நிரந்தரக் கூந்தல் உதிர்வுக்கான வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா தெரபி என்கிற நவீன சிகிச்சை. இது சுருக்கமாக பிஆர்பி என அழைக்கப்படுகிறது.

ஒருவரது சொந்த ரத்தத்தைப் பயன்படுத்தி, அதிலுள்ள பிளேட்லெட் மிகுந்த பிளாஸ்மா கூறுகளை எடுத்து கூந்தல் உதிர்வுள்ள இடங்களில் செலுத்தி கூந்தலுக்கு மறுபடி உயிர் கொடுக்கச் செய்கிற சிகிச்சை. பிளேட்லெட்டுகளில் வளர்ச்சிக்குக் காரணமான காரணிகள் இருக்கும். அவை உடலின் செல்களைத் தூண்டி, அவற்றுக்குப் புத்துணர்வு ஊட்டும். அதற்கு இந்த சிகிச்சை சரியான மாற்று. 4 முதல் 6 சிகிச்சைகளிலேயே நல்ல மாற்றம் காணலாம். மொத்த தலையும் வழுக்கை விழுந்தவர்களுக்கு இந்த சிகிச்சை உதவாது. வழுக்கையின் நிலைகளைப் பொறுத்து மருத்துவர் அந்த நபருக்கு பி.ஆர்.பி சிகிச்சை உதவுமா என்பதை முடிவு செய்வார்.

பி.ஆர்.பி சிகிச்சையானது அறுவை சிகிச்சைகளிலும் காயங்களை ஆற்றும் சிகிச்சைகளிலும் பல காலமாக செய்யப்பட்டு வருவதுதான். பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற துறைகளில் பி.ஆர்.பி. தொழில்நுட்பம் சமீப காலமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: