வெயில் பாதி... மழை பாதி...

நன்றி குங்குமம் டாக்டர்

ஒருபக்கம் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பரவலாக மழையும் ஆங்காங்கே பெய்து கொண்டிருக்கிறது. மழைகாலம் கடந்து இதுபோல் கோடையில் பெய்யும் மழையால் என்னவாகும் என்பதை தெரிந்துகொள்வோம்...கோடைகாலத்தில் குறைந்த அளவு மழைதான் பெய்யும். மழைகாலம் போல் தீவிரமாக இருக்காது. வெப்பம் அதிகரித்திருக்கும் வேளையில் பெய்யும் இந்த குறைவான மழையினால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். அதே சமயம் அந்த வெப்பமும் குறையாது. திடீரென்று ஏற்படும் இந்த தட்ப வெப்ப மாறுபாட்டால் வியர்வை அதிகரிக்கும். நீர்ச்சத்து மற்றும் சோடியம் இழப்பு உடலில் ஏற்படும். இதனால் உடல் பலவீனம், வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். இவற்றை தவிர்க்க அதிக தண்ணீர் அருந்த வேண்டும். உப்புக்கலந்த மோர் அல்லது இளநீர் போன்ற பானங்களை அருந்தலாம்.

உஷ்ணத்தின் காரணமாக வேர்க்குரு மற்றும் உஷ்ணக்கட்டிகளும் ஏற்படலாம். இதற்கு வேர்க்குரு பவுடர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.அதீத வியர்வையால் பூஞ்சைத் தொற்று உண்டாகக்கூடும். மேலும் படர்தாமரை, வெண் தேமல் போன்றவை ஏற்படலாம். எனவே உடலையும், அந்தரங்க பாகங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. உள்ளாடைகளும் பருத்தித் துணியாக இருப்பது அவசியம்.

மேலும் மழையின் காரணமாக கொசுப்பெருக்கம் ஏற்படும். குப்பைக் கூளங்களால் அடைந்து கிடக்கும் நீர்நிலைகளில் இந்த குறைந்த அளவு மழையின் காரணமாக நீர்நிலைகள் மேலும் அசுத்தமாகும். இதனால் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் கொசுக்கள் உட்காருவதால் அவற்றில் வைரஸ் பெருக்கம் ஏற்படும். வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நீரைப் பருகுவதாலோ, உணவை உட்கொள்வதாலோ மஞ்சள் காமாலை எனப்படும் ஹெபடைட்டீஸ் ஏ ஏற்படலாம்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம்.இருமல், தும்மல் போன்றவற்றால் காற்றின் மூலமாக அடுத்தவருக்கு வேகமாகப் பரவும் வைரஸ் காரணமாக Pharyngitis நோய்த்தொற்று ஏற்படும். இதனால் தொண்டை வலி, தொண்டைப்புண், எரிச்சல் போன்றவை ஏற்படும். சிலருக்கு வைரல் இன்பெக்ஷனால் ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், கை கால் வலி போன்றவை ஏற்படும். வீட்டு மருத்துவம் செய்தாலே ஒரு வாரத்தில் இவை குணமாகி விடும். அதிகமாக இருந்தால் மருத்துவரைப் பார்க்கலாம்.

கோடையில் ஈக்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கும்.

அதனால் பாக்டீரியா அதிகமாக பரவும். அதனால் காய்கறி மற்றும் பழங்களை சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். பொதுவாகவே இந்த சமயத்தில் தூய்மையான குடிநீரையே பருக வேண்டும். காரம் மற்றும் மசால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.பாக்டீரியாக்களால் டைபாய்டு, காலரா போன்ற பிரச்னைகள் தோன்றும். (காலரா பிரச்னை தற்போது குறைந்திருக்கிறது) சரியாக பாதுகாக்கப்படாத (பிரிசர்வ்) செய்யப்படாத பால் பொருட்கள் அதாவது கோவா, ஐஸ்கிரீம், மில்க்க்ஷேக் போன்ற பொருட்களை இந்த சூழலில் தவிர்ப்பது நல்லது. இந்த சமயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி சின்னம்மை, தட்டம்மை போன்றவையும் ஏற்படும்.

குறிப்பாக இந்த மாறுபாடான தட்பவெப்பத்தில் Ticks எனப்படும் நோய்க்கிருமி பல்கி பெருகும். இந்த கிருமியினால் உடலில் அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படலாம். அதனால் படுக்கை விரிப்புகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். விடுமுறை காரணமாக சுற்றுலா செல்கிற இடத்திலும், தங்குமிடங்களிலும் கவனம் தேவை.

Related Stories: