உணவுமுறை எப்படி இருக்க வேண்டும்?

நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவு திட்டத்தை வகுத்து சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள், தானிய வகைகள், பாதாம் உள்ளிட்ட கொட்டை வகைகள், பூசணி, பரங்கி உள்ளிட்ட விதை வகைகள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை அடங்கும்.

*மைதா, வெள்ளை பிரெட் போன்றவற்றை தவிர்த்து பழுப்பு அரிசி, ராகி, ஓட்ஸ், கம்பு உள்ளிட்டவைகளை சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 5 முறையாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், கொய்யாப்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சம்பழம் உள்ளிட்டவற்றை உங்களின் வழக்கமான உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.     

*உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பை வழங்கும் ஆலிவ் எண்ணெய், பாதாம், வால்நட் மற்றும் அவகேடா எண்ணெய் வகைகளை பயன்படுத்துங்கள். பால் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து பெறப்படும் குறைந்த கொழுப்பு உள்ள பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். பல்வேறு துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் இருக்கும் ஹைட்ரஜனேற்றம் கொண்ட கொழுப்புகளை தவிர்க்கவும்.  

*சோடா உள்ளிட்ட சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு நிறைந்த பழச்சாறுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இல்லாமல் எப்போதாவது இனிப்பு வகைகளை சாப்பிடலாம். பழத்தை சாப்பிட முடியாதவர்கள் அதை பழச்சாறாக்கி குடிக்கலாம்.

*பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும். புரதச்சத்துகள் நிறைந்த மீன், கோழி, பீன்ஸ், தானிய வகைகள், பருப்பு வகைகள் மற்றும் முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

*உணவில் உப்பை குறைந்த அளவே பயன்படுத்துங்கள். மேலும் அப்பளம், ஊறுகாய், பெட்டிகளில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டை வெகுவாக குறைத்திடுங்கள்.

*மெதுவாக நன்றாக மென்று சாப்பிடுங்கள். உங்கள் வயிறு நிறைந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு நிறைந்த தின்பண்டங்களுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

*உங்கள் உடலுக்கு போதுமான நீர் சத்து இருக்க ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். இதை பெறுவதற்கு தினந்தோறும் 15 நிமிடம் சூரிய ஒளியில் நில்லுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஜிங்க் சத்தை அளிக்கும் முழு தானியங்கள், கொட்டை வகைகள் மற்றும் பூசணி, பரங்கி உள்ளிட்ட விதைகளை சாப்பிடுங்கள்.

Related Stories: