கொரோனாபோபியா

நன்றி குங்குமம் டாக்டர்

பாம்பைக் கண்டால் பயம், உயரமான இடத்திற்கு செல்வதென்றால் பயம், கூட்டத்திற்குள் செல்ல பயம் என்று  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயம் இருக்கும். அதுபோல புதிதாக இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டால் நம் வாழ்க்கையே முடிந்தது என்று அதீத அச்சம் சிலருக்கு ஏற்படுகிறது. இதை கொரோனாபோபியா (Coronaphobia) என்று சொல்கிறோம்.

கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோயைப் பற்றிய அதீத பயத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இதெல்லாம் கொரோனா நோயின் அறிகுறிகளோ என்ற சந்தேகம் உங்களை நிம்மதி இழக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், தேவையில்லாமல் பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டும். மேலும் கொரோனா நோய் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து கூடுதலாக தெரிந்து கொள்ளும் பொருட்டு மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஊடகங்களில் படிக்கும்போதோ, பார்க்கும்போதோ பயம் அதிகரிக்கும். இந்த பயத்தினால் படபடப்பு, மயக்கம், வியர்த்தல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நோய் பரவக்கூடிய விதத்தால், அது தன்னை மட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தாரையும் பாதிப்பில் ஆழ்த்தி விடும். மேலும் இந்நோயால் உயிரிழந்தால் நம்முடைய இறுதி காரியத்தைக்கூட உற்றார், உறவினரால் செய்ய முடியாது போய்விடும் என்பதே இந்நோய் குறித்து அதிக அச்சம் ஏற்பட காரணமாக உள்ளது.

கொரோனா ேநாயைக் காட்டிலும் அதனால் ஏற்படும் பயம் மிகக் கொடுமையானது. இந்நோய் 14 நாட்கள் நம்மை பாதித்தால், அதனால் ஏற்படும் பயம் 14 மாதங்கள்கூட நம்மை பாதிக்கக்கூடும். எனவே, நோய் பயத்தால் தூக்கமின்மை, மனச்சோர்வு, மனப்பதற்றம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். இது எதுவும் முடியாத பட்சத்தில் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ உடனடியாக மனம்விட்டு உங்கள் பயத்தைப் பற்றி பேசுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

கொரோனா நோய் குறித்து அதிக பயத்தில் உள்ளவர்களிடம் குடும்பத்தினரும், சுற்றத்தாரும் அவர்களுடைய பயத்தை அதிகப்படுத்தும் விதமான இறப்பு செய்திகளைக் கூறுவதை தவிர்க்க வேண்டும். செய்தித்தாளிலோ, தொலைக்காட்சியிலோ கொரோனா குறித்த உலக நடப்புகளை ஒரு நாளுக்கு ஒரு முறை தெரிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Related Stories: