பற்களை பாதுகாக்கும் ஃப்ளாஸிங்

நன்றி குங்குமம் டாக்டர்

தினமும் காலையில் இரண்டு நிமிடங்கள் டூத் பிரஷ் கொண்டு சுத்தம் செய்கிறோம். டூத் பிரஷானது பற்களின் மேற்புறத்தில் படிந்துள்ள பற்படலம் மற்றும் வாயில் தங்கியுள்ள உணவுத்துகள்களைச் சுத்தம் செய்ய உதவுகிறது. ஆனால் டூத் பிரஷின் நார்கள் இரண்டு பற்களுக்கும் இடையில் இருக்கும் பகுதியை அடைவதே இல்லை.

இரண்டு பற்களுக்கும் நடுவிலுள்ள முக்கோண வடிவத்திலான இடைப்பட்ட பகுதியை ஈறுகள் மூடியிருப்பது போல இருக்கும். ஆனால், இந்த இடைப்பட்ட பகுதியில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் துகள்கள் மற்றும் பற்படலமாக பாக்டீரியாக்கள் நிறைந்து இருக்கும். டூத் பிரஷ்களும் இந்த பகுதியை சுத்தம் செய்யாததால்தான் ஈறு பிரச்னைகள், பல்சொத்தை என பல் தொடர்பான பெரும்பாலான பிரச்னைகள் உருவாகின்றன.  இதற்கான எளிய தீர்வுதான் ஃப்ளாசிங் (Flossing)முறையாகும்.

எப்படி செய்வது?

ஃப்ளாசிங் செய்வதற்கு மருந்தகங்களில் கிடைக்கும் ஃப்ளாசிங் நூலினை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு முறை அனைத்து பற்களுக்கும் ஃப்ளாஸ் செய்ய 18 முதல் 24 அங்குலம் அதாவது ஒரு முழம் நூலை எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு கை நடுவிரலில் முக்கால்வாசி நூலைச் சுற்றிக்கொண்டு மற்றொரு கை நடுவிரலின் மீதமுள்ள நூலைச் சுற்றிக் கொள்ள வேண்டும். அதாவது முதல் கையில் நல்ல நூலும், வாயில் சுத்தம் செய்த அசுத்தமான நூலை மற்றொரு கையிலும் சேகரித்துக் கொள்ள ஏதுவாக இந்த ஏற்பாடு.

இப்போது ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் உதவியுடன் ப்ளாஸ் நூலைப் பிடித்துக் கொண்டு பல் இடுக்கில் நுழைக்க வேண்டும். பற்களுக்கு இடையில் நூலை நுழைக்கும்போது பொறுமையாகவும் தன்மையாகவும் நுழைக்க வேண்டும். இல்லையெனில் ஈறுகளில் காயம் ஏற்படலாம்.பற்களுக்கு இடையில் நுழைத்த பிறகு ஒரு பக்கமாக பல்லின் மீது சாய்த்தபடி, அதாவது C வடிவத்தில் நூலை மேலும் கீழும் நகர்த்த வேண்டும். ஒரு பக்கம் முடிந்ததும் மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்யும்போது நூலின் அழுத்தம் முழுவதும் பற்களின் மேல்படும்படியாக இருக்க வேண்டுமே தவிர ஈறுகளின் பக்கம் அழுத்தம் செல்லவே கூடாது. இப்படி செய்து முடித்ததும் நூலை வெளியே எடுத்துவிட வேண்டும். நூலானது நார்நாராக பழுப்பு நிறத்தில் இருந்தால் அது நல்லது. உள்ளே இருக்கும் அழுக்கை எடுத்துக்கொண்டுள்ளோம் என்று அர்த்தம். இப்போது இந்த நூலை இரண்டாம் கையில் சுருட்டிக் கொண்டு நல்ல நூலை அவிழ்த்து அடுத்த பல்லிற்குச் சுத்தம் செய்யத் துவங்க வேண்டும். இப்படி மேல் வரிசை இடது பக்க கடைசி பல்லில் துவங்கினால் மேல் வரிசை முழுவதும் முடித்து இடது பக்க கீழ்வரிசை கடைசிப் பல்லில் முடிக்க வேண்டும்.

ஃப்ளாஸ் நூல்கள் பலவிதம்

சிலருக்கு பற்கள் கூட்டமாக அமைந்திருக்கும். சிலருக்கு இடைவெளி விட்டு அமைந்திருக்கும். சிலர் இம்ப்ளான்ட் மற்றும் பிரிட்ஜ் பொருத்தியிருப்பார்கள். சிலர் பிரேசஸ் அணிந்திருப்பார்கள். ஃப்ளாஸ் நூலைப் பொருத்தவரை பல வகைகள் இருக்கின்றன. ஆகையால் ஒவ்வொருவருடைய தேவைக்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.இனி ஒவ்வொரு வகையாகப் பார்ப்போம்.

மெழுகு பூசப்படாத ஃப்ளாஸ் (Unwaxed Floss)

இத்தகைய ஃப்ளாஸ் ஆனது பல மெல்லிய நைலான் இழைகளைக் கொண்டு ஒரு நூல் போல அமைந்திருக்கும்.இந்த வகை ஃப்ளாஸ் பற்களுக்கு இடையில் இறுக்கமான இடங்களில் கூடச் சென்று சுத்தம் செய்யும்.ஆகையினால் பற்களுக்கு நடுவில் இடைவெளி இல்லாமல் இருந்தால் இவ்வகை ஃப்ளாஸினைத் தேர்வு செய்யலாம்.மேலும் நல்ல பிடிமானமும் இருக்கும். இந்த வகை ஃப்ளாஸ் ஆனது எளிதில் நார்நாராய்ப் பிரிந்து விடக்கூடும் என்பதே இதன் பாதகமாகும்.

மெழுகு பூசப்பட்ட ஃப்ளாஸ் (Waxed Floss)

நைலான் இழைகளின் மேல் மெழுகு பூசப்பட்டிருக்கும். சில வகைகளில் இவை புதினா மற்றும் இலவங்கத்தால் சுவையூட்டப்பட்டிருக்கும்.இவ்வகையில் உள்ள சாதகம் என்னவென்றால் இதில் மெழுகு பூசப்பட்டுள்ளதால் முதல் வகையைப் போல நார்நாராக எளிதில் உருக்குலையாமல் உறுதியாக உழைக்கும். மெழுகு பூசப்பட்டிருப்பதால் இவை சற்று தடிமனாக அமைந்திருக்கும்.எனவே பற்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் இருந்தால் இதை உபயோகிப்பது சற்று சவாலாக அமையும்.

டென்டல் டேப் (Dental Tape)

இவ்வகையானது சாதாரண ஃப்ளாஸ் வகையை விட தடிமனாகவும் தட்டையாகவும் அமைந்திருக்கும்.இதில் மெழுகு பூசப்பட்ட மற்றும் மெழுகு பூசப்படாத வகை என இரண்டு வகைகள் கிடைக்கின்றன. சிலருக்கு பற்களுக்கு இடையில் இடைவெளி காணப்படும். இத்தகையவர்கள் இந்த வகையானது தடிமனாக இருப்பதால் நல்ல பலனைத் தரும்.மேலும் எளிதில் உடையாது. இதிலுள்ள குறை என்னவென்றால் பற்கள் கூட்டமாக (Crowding) இருக்கும் நபர்களால் இவற்றை எளிதில் உபயோகிக்க இயலாது.

PTFE ஃப்ளாஸ்

இந்த வகை ஃப்ளாஸ்கள் பாலிஎதிலீன் டெட்ராப்ளுரோ எதிலின் எனப்படும் பொருளால் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை ஃப்ளாஸ்கள் கூட்டமான பற்களுக்கு இடையில் கூட எளிதில் சென்று சுத்தம் செய்யும் ஆற்றல் உடையது. இதில் உள்ள குறை என்னவென்றால் இவ்வகை ஃப்ளாஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் புற்றுநோயினை உருவாக்கும் தன்மை உடையதாக இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஃப்ளாஸ் பிக் (Floss Pick)

ஃப்ளாஸிங் செய்ய பலர் முதலில் தயக்கம் காட்டுவார்கள்.அத்தகையவர்களுக்கு இவ்வகை உதவும்.மேலே கூறப்பட்டுள்ள நைலான் வகை ஃப்ளாஸ் நூல்தான் இருக்கும். ஆனால், இந்த நூல் வளைந்த கம்பியுடன் ஒரு சிறிய கைப்பிடியோடு இணைக்கப்பட்டிருக்கும். ஆகையால் பல்துலக்கியைப் போல கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஃப்ளாசிங் செய்யலாம்.

வயதானவர்கள், முடக்கு வாதம் அல்லது கைகளை உபயோகிப்பதில் சிக்கல் உடையவர்கள் இவ்வகையினை எளிதில் உபயோகிக்கலாம்.மேலும் குழந்தைகள் மற்றும் ஃப்ளாசிங் முறையைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுபவர்கள் உபயோகிக்கலாம்.ஆனால், பிரேஸஸ் மற்றும் ரீடெய்னர்கள் அணிந்திருப்பவர்கள் மற்றும் பிரிட்ஜ் பொருத்தியிருப்பவர்கள் இவ்வகை ஃப்ளாஸ்களை உபயோகிக்கஇயலாது.

ஃப்ளாஸ் த்ரெட்டர்ஸ் (Floss Threaders)

பிரேஸஸ் அணிந்துள்ளவர்கள் சாதாரண ஃப்ளாஸை கம்பிகளுக்கு நடுவில் நுழைத்து ஃப்ளாஸ் செய்வது மிகவும் சிரமம்.ஆகையால் நூல் கோர்க்கும் ஊசியைப் போல ஃப்ளாஸ் நூலை பிளாஸ்டிக் ஊசியில் நுழைத்து கம்பியின் நடுவில் எளிதாக நுழைத்து ஃப்ளாஸ் செய்து விடலாம். இவற்றை ப்ரிட்ஜ் மற்றும் ரீடெய்னர்ஸ் அணிந்திருப்பவர்களும் உபயோகிக்கலாம்.

சூப்பர் ஃப்ளாஸ் (Super Floss)

இந்த வகை ஃப்ளாஸில் மூன்று பகுதிகள் அமைந்திருக்கும். முதலில் முனை கடினமானதாக இருக்கும். பிரேஸஸ், ரீடெய்னர்ஸ் இடையில் நுழைக்க ஏதுவாக இருக்கும். இதைத் தொடர்ந்து பஞ்சு போன்ற ஃப்ளாஸ் (Spongy Floss) இருக்கும். இதைக் கொண்டு பிரிட்ஜ், இம்ப்ளான்ட், பிரேஸஸ் அடியில் பற்படலத்தைச் சுத்தம் செய்து விட முடியும். இந்த பஞ்சு போன்ற ஃப்ளாஸைத் தொடர்ந்து வழக்கமான ஃப்ளாஸ் நூல் அமைந்திருக்கும். பிரிட்ஜ், இம்ப்ளான்ட், பிரேஸஸ் பற்களுக்கு இடையில் இடைவெளி மற்றும் ரீடெய்னர்ஸ் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.பற்கள் இடுக்கமாக உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும்.

பித்தப்பை கற்களை அகற்ற...

பித்தப்பைக் கற்களைக் அகற்ற அறுவை சிகிச்சைக்கு மாற்றாகப் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். உர்சோடியோல் (Ursodiol) உள்ளிட்ட சில மருந்துகள் பித்தப்பைக்கற்களில் உள்ள கொழுப்பைக் கரைக்கப் பயன்படுத்தப்படும். இந்த சிகிச்சை மூலம் பிரச்னையைத் தீர்க்கப் பல மாதங்கள் ஆகும் என்றாலும் 5மிமி அளவுக்கும் குறைந்த அளவிலான சிறு கற்கள் மட்டுமே கரையும்.

நோயைக் கண்டறிய மருத்துவர் இஆர்சிபி சிகிச்சை முறையைப் பரிந்துரைப்பார்.  பித்தக் கற்கள் காரணமாக பித்தநீர் நாளத்தில் அடைப்பு இருப்பின், சிகிச்சையை உடனடியாகத் தொடங்குவார். பித்தப்பையிலேயே பித்தக்கற்கள் காணப்படுவதுடன், தொடர் / கடுமையான வலி இருந்தால், உடனடி அறுவை சிகிச்சை அவசியமாகும்.

 

பித்தப்பை அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை முழுமையாக அகற்றப்படும். பித்தக் கற்கள் காரணமாகக் கடுமையான வலி ஏற்பட்டால் அறுவை சிகிச்சையே கடைசி தீர்வாகும்.  லேபரோஸ்கோபிக் என்னும் வயிற்றறை நுண்ணோக்கி அறுவை சிகிச்சையில் சிறு துளையிட்டுப் பித்தக் கற்கள் அகற்றப்படும். பித்தப்பை நோய் தீவிரமானால் திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும்.  பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால் உங்கள் மருத்துவர் ரேடியேஷன் கதிர்வீச்சு அல்லது கீமோதெராபி உள்ளிட்ட கூடுதல் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

Related Stories: