ஆண்களின் அவதி...

நன்றி குங்குமம் டாக்டர்

அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர். கடந்த சில வாரங்களாக சிறுநீர் செல்லும்போது வேகம் குறைகிறது என்பதற்காக என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு ப்ராஸ்டேட் சுரப்பி சிறிய அளவில் வீங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாத்திரை சாப்பிடச் சொன்னேன். சில வாரங்களில் அவருடைய பிரச்னை சரியாகிவிட்டது.

‘ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் என்னிடம் வந்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்’ என்று அப்போது அவரிடம் சொல்லியிருந்தேன். அதை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து ‘சிறுநீர் அடைத்துக்கொள்கிறது’ என்ற புதுப் பிரச்னையோடு வந்தார். பரிசோதித்ததில், அவருக்குப் ப்ராஸ்டேட் புற்றுநோய் இரண்டாம் கட்டத்தில் இருந்தது. அதற்குப் பிறகு 3 வருடங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்த பிறகுதான், அவர் புற்றுநோயின் பிடியிலிருந்து முழுமையாக மீண்டார். அதுவரை பல அவதிகளை அவர் எதிர்கொண்டார்.

அவர் மட்டும் முறையான மறுபரிசோதனைக்கு வந்திருந்தால், புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்திருக்க முடியும். சிகிச்சையும் மிக எளிதாக அமைந்திருக்கும். அவதிகளும் குறைந்திருக்கும். பொதுவாக, பயனாளிக்கு ஒருமுறை ப்ராஸ்டேட் வீங்கத்தொடங்கிவிட்டது என்றால் அதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அது சாதாரண வீக்கத்துடன் நின்றுவிடுகிறதா, புற்றுநோயாக மாறுகிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

ப்ராஸ்டேட் சுரப்பி என்பது என்ன?

அடிவயிற்றில், சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்க்குழாய் தொடங்கும் இடத்தில், வெளிப்புறத்தில், பேரிக்காய் வடிவத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. அதுதான் ப்ராஸ்டேட் சுரப்பி (Prostate Gland). சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றி ப்ராஸ்டேட் இருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு பெருநெல்லி அளவில்தான் இருக்கிறது. இதன் நடுவே சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் செல்கிறது. இந்த சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே இருக்கிறது; பெண்களுக்கு இல்லை. இதுவே இதற்குரிய தனிச்சிறப்பு. முழுக்க முழுக்க இது ஒரு பாலியல் சுரப்பி. இதில் புரதத்தினால் ஆன ஒரு திரவம் சுரக்கிறது. இது விந்து செல்களுக்கு ஊட்டம் தருகிறது; விந்தணுக்கள் வெளியேறும்போது அதை எடுத்துச்செல்லும் ஊடகமாகவும் உதவுகிறது.

ப்ராஸ்டேட் வீக்கம்

ப்ராஸ்டேட் சுரப்பியில் முக்கியமாக இரண்டுவிதப் பிரச்னைகள் உருவாகின்றன. ஒன்று, ப்ராஸ்டேட் வீக்கம்; மற்றொன்று ப்ராஸ்டேட் புற்றுநோய். முடி நரைப்பதைப்போல ப்ராஸ்டேட் வீக்கம் (BPH) என்பதும் முதுமையின் அடையாளம்தான். இது ஏற்பட்டவர்களுக்கு அடிக்கடி சிறுகச் சிறுக சிறுநீர் கழியும். அவசரமாகக் கழியவேண்டும்போல் இருக்கும். ஆனாலும் சிறுநீர் கழிவது தடைப்படும். சிறுநீர் கழித்த பிறகும் இன்னும் கழிக்க வேண்டும்போல் இருக்கும். நாட்பட நாட்பட சொட்டுச்சொட்டாகக் கழியும். இதை ஆரம்பத்தில் மாத்திரைகளால் குணப்படுத்தலாம். இயலா விட்டால் TURP எனும் அறுவை சிகிச்சையில் சரிப்படுத்தலாம்.

ப்ராஸ்டேட் புற்றுநோய்

60 வயதைக் கடந்த ஆண்களில் சுமார் 14 சதவீதம் பேருக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுகிறது. அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக ப்ராஸ்டேட் புற்றுநோயால் இறப்பவர்கள்தான் அதிகம். நம் நாட்டில் அந்த அளவுக்குப் பாதிப்பு இல்லை. என்றாலும், அவர்கள் சாப்பிடும் உணவுகளை இப்போது நாமும் சாப்பிடுவதால், இங்கும் ப்ராஸ்டேட் புற்றுநோய்

வருவது அதிகரித்து வருகிறது.

முக்கியமாக, ரெட் மீட் எனப்படும் இறைச்சிகள்தான் இந்தப் புற்றுநோயை ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கின்றன. உடற்பருமன் உள்ளவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். வெயிலுக்குச் செல்லாமலும், இடுப்புக்கு எந்தப் பயிற்சியும் தராமலும் இருக்கிற ஆண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். காரணம், வைட்டமின்-டி குறைவாக உள்ளவர்களுக்கு புராஸ்டேட் புற்று அதிகம் வருவதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

தகாத பாலுறவு வைத்துக் கொள்கிறவர்களுக்கும் இது ஏற்படுவதுண்டு. குடும்பத்தில் யாருக்காவது இது வந்திருந்தால், வாரிசுகளுக்கு வர வாய்ப்பிருக்கிறது. வழக்கமாக நம் உடலில் சுரக்கும் என்ஸைம்கள் நல்லதே செய்யும். ஆனால், PRSS3 என்று ஒரு என்சைம் இருக்கிறது. இது நமக்கு எதிரியாகிவிடுகிறது. இதன் அளவு ரத்தத்தில் அதிகமாக இருந்தால், எறும்புகள் மரத்தைச் சுற்றி மண்புற்றை வளர்ப்பதைப்போல், இது புராஸ்டேட் செல்களைத் தூண்டி புற்றுநோயை வளர்க்கிறது.

அறிகுறிகள் என்ன?

நடுத்தர வயதைக் கடந்த ஆண்களுக்கு கீழே சொன்னவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். காரணம், இந்த அறிகுறிகள் சாதாரணமாக புராஸ்டேட் வீங்கும்போதும் (BPH) ஏற்படலாம்; புற்றுநோயிலும் காணப்படலாம். உண்மையான காரணத்தை மருத்துவர்தான் அறிய முடியும்.

*அடிக்கடி சிறுநீர் போகும்.

*சிறுநீர் செல்லும்போது வேகம் குறையலாம்.

*சிறுநீர் செல்வதற்குச் சிரமப்படலாம்.

*சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்கத் தோன்றலாம்.

*திடீரென்று மொத்தமே சிறுநீர் கழிக்க முடியாமலும் போகலாம்.

*சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுமையான எரிச்சல் ஏற்படும். வலிதாங்க முடியாது.

*சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இது ஒரு முக்கியமான அறிகுறி.

*விரைகளில் வலி உண்டாகலாம். இடுப்பு வலியும் முதுகு வலியும் அடிக்கடி தொல்லை தரலாம். இவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது.

என்ன பரிசோதனைகள் உள்ளன?

பயனாளியின் ஆசனவாயின் வழியே மலக்குடலுக்குள் மருத்துவர் விரலை நுழைத்துப் பார்க்கும் ‘விரல் பரிசோதனை’யிலேயே ப்ராஸ்டேட் சுரப்பி சாதாரணமாக இருக்கிறதா, வீங்கி இருக்கிறதா என்பதைச் சொல்லிவிடுவார். ஆனாலும், அந்த வீக்கம் புற்றுநோயைச் சேர்ந்ததா என்று சரியாகக் கணித்துச் சொல்ல மற்ற ரத்தப் பரிசோதனைகளும் ஸ்கேன் பரிசோதனைகளும் தேவைப்படும்.

பிஎஸ்ஏ (PSA) பரிசோதனை

பிஎஸ்ஏ என்பது ‘புராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென்’ (Prostate Specific Antigen) என்பதன் சுருக்கம். இது ப்ராஸ்டேட் செல்கள் சுரக்கிற ஒருவித புரோட்டீன். இதன் இயல்பு அளவு 4 நானோகிராம்/மி.லி. இதற்கு மேல் இந்த அளவு கடந்துவிட்டால், புராஸ்டேட் வீங்கியிருக்கிறது என்று அர்த்தம்.

அதேபோல் ‘ஆசிட்/ஆல்கலைன் பாஸ்படேஸ் பரிசோதனையில் அவற்றின் அளவுகள் அதிகரித்தாலும் ப்ராஸ்டேட் வீங்கியிருக்கிறது என்றுதான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த அளவுகள் அதிகரித்தாலே புற்றுநோயாக இருக்கும் என்று முடிவு கட்ட முடியாது. பலருக்கு சாதாரண ப்ராஸ்டேட் அழற்சி (Prostatitis) இருந்தாலும் இந்த அளவுகள் அதிகரிக்கும். அப்போது அதற்குரிய சிகிச்சைகள் தேவைப்படும்.

புற்றுநோயை உறுதி செய்ய…

‘பிஎஸ்ஏ’ அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். இவற்றில் ப்ராஸ்டேட் எந்த அளவுக்கு வீங்கியுள்ளது என்பது தெரியும். அந்த வீக்கம் எந்த அளவுக்குச் சிறுநீர்ப் பையை அடைத்துள்ளது என்பதையும், ஒருமுறை சிறுநீர் கழித்த பின்னர்  சிறுநீர்ப் பையில் எவ்வளவு சிறுநீர் தங்குகிறது என்பதையும் காணலாம். இதை வைத்து நோயின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

இதிலும் நோயின் பாதிப்பு தீர்மானமாகத் தெரியவில்லை என்றால், எம்.ஆர். ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி (MR Spectroscopy) எனப்படும் சிறப்புப் பரிசோதனை தேவைப்படும். அத்தோடு சிடி/எம்ஆர்ஐ ஸ்கேன், எலும்பு ஸ்கேன் மூலம் புராஸ்டேட்டின் நிலைமை, புற்றுநோயா, இல்லையா, ஒரு வேளை அது புற்றுநோயாக இருந்தால், அது வயிற்றிலும் உடலிலும் எலும்புகளிலும் பரவியிருக்கிறதா என பல விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு ஏற்றபடி சிகிச்சை முறைகளை அமைத்துக்கொள்ள முடியும்.

திசு ஆய்வுப் பரிசோதனை

ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு, ‘ட்ரான்ஸ் ரெக்டல் ட்ரூகட்பயாப்சி (Transrectal trucut biopsy எனும் திசு ஆய்வுப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். மலக்குடல் வழியாக புராஸ்டேட்டை அணுகி, அதிலிருந்து சிறு திசுவை எடுத்துப் பரிசோதிக்கும் செயல்முறை இது. இதில் புற்றுநோயின் வகையைத் தெரிந்துகொள்ள முடியும். அதன் உதவியால், இதற்கு எந்த சிகிச்சை எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதை நோயாளிக்கு முன்னரே தெரிவித்துவிடலாம்.

புற்றுநோய் நிலைகள்

நிலை 1: மிக ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய். பெரும்பாலும் இது தற்செயலாகத் தெரியவரும்.

நிலை 2: புராஸ்டேட் சுரப்பியின் ஒன்று அல்லது இரண்டு பக்க மடல்களிலும் புற்றுநோய் இருக்கும் நிலைமை. ஆனால், இது அருகில் பரவியிருக்காது.

நிலை 3: புராஸ்டேட் புற்றுநோயோடு அருகில் உள்ள உறுப்புகளுக்கும் அது பரவியிருக்கும் நிலைமை.

நிலை 4: புராஸ்டேட் புற்றுநோயோடு உடலில் மற்ற பகுதிகளிலும் பரவியிருக்கும் நிலைமை.

சிகிச்சை என்ன?

கண்காணிப்பு சிகிச்சை: மிகவும் வயதானவர்களுக்கு ஆரம்பநிலையில் இந்தப் புற்றுநோய் இருந்தால், அதை கண்காணித்து வந்தால் மட்டும் போதும். காரணம், இது மிக மெதுவாகவே வளரும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிஎஸ்ஏ பரிசோதனை மற்றும் தேவையான தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டால் போதும். மாறாக., இது வேகமாக வளர்கிறது என்றால் மட்டும் மற்ற சிகிச்சைகளை ஆரம்பிக்கலாம்.

அறுவை சிகிச்சை:
புராஸ்டேட் சுரப்பியை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்படும் சிகிச்சை இது. அத்தோடு விரைகள் (Testes)  இரண்டையும் அகற்றுவதும் உண்டு. காரணம் என்னவென்றால், விரைகளில் சுரக்கும் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் புராஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சியைத் தூண்டும் குணமுள்ளது. அதைத் தவிர்க்கவே இந்த சிகிச்சையும் தேவைப்படுகிறது. வயதான காலத்தில் விரைகள் நீக்கப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பில்லை. பதிலாக, மாற்று ஹார்மோன் மருந்துகளைக் கொடுத்துவிடுவார்கள்.

கதிர்வீச்சு சிகிச்சை: வெளிக்கதிர் வீச்சு, உள்கதிர் வீச்சு என இரண்டு முறைகளில் இது மேற்கொள்ளப்படுவது நடைமுறை.மருந்து சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை: நோயாளியின் வயது, உடல்தகுதி, புற்றுநோய் நிலைமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த சிகிச்சைகள் கொடுக்கப்படும். ஹார்மோன் சிகிச்சையின்போது ‘ஸ்டில்போஸ்டீரால்’ எனும் ஹார்மோன் மாத்திரை/ஊசி பயன்படுத்தப்படும்.

புராஸ்டேட் புற்றுநோய்க்கு எந்த சிகிச்சை கொடுக்கப்பட்டாலும் நோயாளிக்குக் குறைந்தது 3 வருடங்களுக்குத் தொடர் கண்காணிப்பும் பரிசோதனைகளும் தேவைப்படும். அப்போதுதான் இது உடலில் மற்ற இடங்களில் பரவாமல் தடுக்கமுடியும்.

    

ப்ராஸ்டேட் பிரச்னையை தடுக்க!

இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள்

*சிறுநீர் கழிக்கும்போது இடுப்புக்குழி தசைகளை சுருக்கி சிறுநீர்க் கழிப்பை நிறுத்துங்கள்.

*20 நொடிகளுக்கு இப்படி நிறுத்துங்கள்.

*இப்போது மறுபடியும் சிறுநீர் கழிக்கவும்.

*இது ‘ஒரு சுருக்கம்’ எனப்படுகிறது.

*இப்படி 15 முறை செய்யவும்.

*இது ஒரு சுற்று எனப்படுகிறது.

இப்படி தினமும்  3லிருந்து 5 சுற்றுகள் வரை செய்யுங்கள்.

Related Stories: