பெண்களை பாதிக்கும் தைராய்டு நோய்-அதன் தீர்வுகள்!

நன்றி குங்குமம் தோழி

தைராய்டு பிரச்சனைகள்

ஆண்களுக்கு இருப்பதை விட பெண்களுக்கு ஐந்து முதல் எட்டு மடங்கு  அதிகமாக வருகிறது என்பதும்  தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் வரை அவர்களின் நோய் குறித்து தெரியாமலே இருக்கிறார்கள் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

உண்மையில்,  ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது  தைராய்டு கோளாறுகளை சந்திக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.தற்போது உள்ள வாழ்க்கை சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா வயதினரும் எதிர்கொள்ளும் ஒரு  ஹார்மோன் பிரச்சனையாகவே இந்த தைராய்டு நோய்  உள்ளது.எனவே இந்த தைராய்டு  பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள் மற்றும் ஆயுர்வேதத்தில் இதற்கான சிறப்பான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

தைராய்டு என்பது கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய, பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது எண்டோகிரைன் சிஸ்டம் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒரு பகுதி. நம்  உடலின் பல செயல்பாடுகளை ஒருங்கிணைக்க எண்டோகிரைன் அமைப்பு செயல்படும். அதில் தைராய்டு சுரப்பி, நம்  உடலின் வளர்சிதை மாற்றங்களான இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, செரிமானம் மற்றும் எவ்வளவு விரைவாக கலோரிகளை உடல் பயன்படுத்துகிறது போன்றவற்றை தனது ஹார்மோன்கள் மூலம் கட்டுப்படுத்துகின்றது.

தைராய்டு சுரப்பி ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், இதன் செயல்பாடுகள் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணு, திசு மற்றும் உறுப்புகளையும் பாதிக்கும். ஒரு சாதாரண அளவிலான தைராய்டை கழுத்தில் பார்க்க முடியாது, அதை உணரவும் முடியாது. சில நோய் நிலைகளில்  தைராய்டு சுரப்பியில் (கோயிடர்)  மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தைராய்டு கழுத்தில் ஒரு வீக்கம் போல காண முடியும் அல்லது உணர முடியும்.இது உடலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத கோயிடர் முதல், உயிருக்கு ஆபத்தான தைராய்டு புற்றுநோய் வரை எந்த நோயாகவும் இருக்கலாம்.

தைராய்டு ஹார்மோன்கள்

தைராய்டு சுரப்பி, டி 3 மற்றும் டி 4 என்று 2 முக்கிய ஹார்மோன்களை உருவாக்குகிறது . இந்த ஹார்மோன்களை உருவாக்க தைராய்டுக்கு போதுமான அளவு அயோடின் தேவை. இங்கு சிறிய அளவில்  உற்பத்தி செய்யப்படும் மற்றொரு ஹார்மோன் ‘‘கால்சிட்டோனின்” (Calcitonin). இது, நம்  ரத்தத்திலுள்ள  கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்தும். இந்த தைராய்டு ஹார்மோன்கள் உருவாவது மூளையில் உள்ள பிட்யூட்டரி  சுரப்பியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளினால் நம் உடலில் பல பாதிப்புகள் உருவாகின்றன.

தைராய்டு நோய் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்,  வளர்இளம் பருவத்தினர் மற்றும் முதியவர்கள் என யாரையும் பாதிக்கலாம். இது பிறக்கும்போதோ,  பெண்களுக்கு பூப்படையும் வயதிலோ, கர்ப்ப காலத்திலோ, குழந்தை பிறந்த பிறகோ அல்லது மாதவிடாய் நின்ற பிறகோ கூட ஏற்படலாம். சிகிச்சையளிக்கப்படாத தைராய்டு கோளாறுகள், இதய நோய், உயர் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை போன்ற பிற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஆகையால் மருத்துவரின் அறிவுரை படி ரத்த பரிசோதனை, தைராய்டு பரிசோதனைகள்  (T3, T4, TSH, Thyroid antibodies, Calcitonin, Thyroglobulin) செய்து கொண்டு தக்க சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஹைப்போ தைராய்டிசம்

தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாத ஒரு நிலை ஹைப்போ தைராய்டிசம் ஆகும். இது மிகவும் பொதுவான தைராய்டு கோளாறு ஆகும், இது ஆறு முதல் பத்து சதவீதம் வரை பெண்களை அதிகம் பாதிக்கிறது.

ஹைப்போ தைராய்டிசம் வர காரணங்கள்

*பரம்பரை.  

*துரித உணவுகள் உட்கொள்ளுதல்

*சில மருத்துவ நோய் நிலைகள் (pernicious anemia, type 1 diabetes, primary adrenal insufficiency, lupus, rheumatoid arthritis, Sjogren’s syndrome and Turner syndrome)

*தைராய்டு புற்றுநோய், தைராய்டெக்டோமி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை பெற்றிருந்த நிலையில் வரலாம்.

*ஹாஷிமோடோ போன்ற ஆட்டோ இம்யூன் நிலைமைகள்

*உணவில் அயோடினின் ஏற்றத்தாழ்வு

*மன அழுத்தம்.

ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்

*உடல் சோர்வு, தசை பலவீனம் மற்றும் நடுக்கம்

*உடல் எடை அதிகரித்தல் மற்றும் எடை குறைக்க கடினமாக உள்ள நிலை

*மறதி, தலைச்சுற்றல்

*மாதவிடாய் கோளாறுகள், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் சுழற்சி நிறுத்தப்படுவது.

*கரகரப்பான குரல், வட்டமாக வீங்கிய முகம்

*அதிக குளிர் தாங்காமல் இருப்பது

*முடி உதிர்தல் மற்றும் எளிதாக  உடையும் நகங்கள்

*மூட்டுவலி, உலர்ந்த சருமம் மற்றும் குதிகால் வெடிப்பு

*மலச்சிக்கல்

*மெதுவான இதய துடிப்பு (65 க்கும் குறைவானது)

*மனச்சோர்வு, கவலை, எரிச்சல் மற்றும் பதட்டம் அதிகமாக ஏற்படுதல்

*தூக்கமின்மை, பார்வை பிரச்சினைகள் அல்லது கண் எரிச்சல் போன்றவை உண்டாகும்

ஆயுர்வேத கண்ணோட்டத்தில், செயல்படாத தைராய்டு ஒரு கப நிலை. இவ்வியாதி கபத்தின் குணங்களோடு மந்த அக்னி உள்ள கப நபர்களையும்  கப ஏற்றத்தாழ்வு உள்ளவர்களையும் அதிகம் பாதிக்கின்றது.

மருத்துவம்

ஆயுர்வேதத்தில் உள்ள அனைத்து சிகிச்சையும் நோயின் மூல காரணத்தை அடிப்படையாகக் கொண்டது. முதலில், நோய்க்கான காரணத்தை (உணவு, வாழ்க்கை முறை, அழுத்தங்கள் போன்றவை) அகற்ற வேலை செய்து, பின்னர் தோஷங்களுக்கு சிகிச்சையளிக்கிறோம். அக்னி அல்லது செரிமானத்தை வலுப்படுத்துவது மற்றும் கபத்தை சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது மூலம் அனைத்து நபர்களும் பயனடையலாம். உணவு, உடற்பயிற்சி, உடலிலுள்ள நச்சை வெளியேற்றுதல் (detoxification) மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் பயனளிக்கும்.

*உள்மருந்தாக வாரணாதி கஷாயம், புனர்நவாதி கஷாயம்,  திரிபலாதி கஷாயம்,  குக்குலுதிக்தகம் கஷாயம்,  காந்தர்வஹஸ்தாதி கஷாயம்,  இந்துகாந்தம் கஷாயம், காஞ்சனாரா குக்குலு, நவக குக்குலு, பிப்பலி ரசாயனம்,  பிப்பலி வர்தமண ரசாயனம், மெதோஹரவிடங்காதி லோஹம்.

*பவுடர் மசாஜ், வசதி(எனிமா), விரேசனம், போன்ற பஞ்சகர்மா சிகிச்சைகள் செய்யலாம்.

*யோகாசனம், பிராணாயாமம், நடைப்பயிற்சி போன்றவை செய்வது நல்லது.

உணவுமுறை

எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

தோல் நீக்கப்படாத, பளபளப்பு ஏற்றப்படாத முழு தானியங்கள் (Unpolished grains), கேழ்வரகு, பார்லி. வெங்காயம், பீன்ஸ், அவரை, கொத்தவரை, கத்தரிக்காய் பிஞ்சு, வெண்டைக்காய், தக்காளி, குடைமிளகாய், மிளகாய், கீரைகள், காய்கள். நெல்லிக்காய், கொய்யா பழம்.  நல்லெண்ணெய், தேங்காய்  எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். உணவில் பெருங்காயம், சீரகம், மஞ்சள், மிளகு, பூண்டு போன்றவை சேர்த்துக்கொள்வது நல்லது. முருங்கைக்காய் உடலில் அயோடின் அளவை மேம்படுத்த உதவுகிறது. தனியா (கொத்தமல்லி) மற்றும் சீரகம் சேர்த்து காய்ச்சிய நீர் தைராய்டு பிரச்சினைகளில் காணப்படுகின்ற வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சோயாபீன்ஸ் மற்றும் அது சார்ந்த பொருட்கள்.மரவள்ளி, சர்க்கரைவள்ளி, காலிஃப்ளவர், புரோக்கோலி, முட்டைகோஸ், நூக்கல், முள்ளங்கி மற்றும் வேர்க்கடலை, ஹைட்ரஜனைட்டெட் ஆயில், vegetable  ஆயில், artificial colors மற்றும் வெள்ளைமாவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சர்க்கரை, காபி, அதிக புரதம் உள்ள உணவுகள் ஹைபோதைராடிசம் உள்ளவர்களுக்கு நல்லது இல்லை.

சிறுதானியங்களை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், நன்றாக சமைத்தல் அல்லது ஊறவைத்தல், முளைகட்டுதல் போன்ற செயல்கள் மூலமாக அதிலிருக்கும் பாலிபினால்கள், பிற எதிர்சத்துகளை அழித்து பிறகு உணவில் சேர்க்க வேண்டும்.கடுகு அதிகம் சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தைராய்டு வியாதிகள் மிகவும் பொதுவானதாக இருந்தாலும், ஆயுர்வேதம் செயற்கை தைராய்டு மருந்துகளை உட்கொள்வதைத் தாண்டி நோய்க்கான மூல காரணத்தை நிவர்த்தி செய்து முழுமையான தீர்வுகளை வழங்குகிறது.வைட்டமின் டி குறைபாடு தைராய்டு பிரச்சினைகளைத் தூண்டும். அதிகாலையில் சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வது தைராய்டு குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் கால்சியம் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.

ஹைப்பர் தைராய்டிசம்

தைராய்டு நோயின் மற்றொரு வடிவமான ஹைப்பர் தைராய்டிசத்தில் அதிக தைராய்டு ஹார்மோன் உருவாகும். இத்தைராய்டு நோயில் முன்கழுத்துப் பகுதியில் கட்டி போன்று தோன்றுவதை ‘Goitre’ என்று கூறுவர்.  கிரேவ்ஸ் நோய் என்பதும் ஒரு வகை ஹைப்பர் தைராய்டிசம் தான். இதை தொடர்ந்து பெரியவர்களுக்கு ‘Myxoedema’, குழந்தைகளுக்கு Cretinism போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தை பாதிக்கிறது.

பொதுவான அறிகுறிகள்

*பசி அதிகரித்த போதிலும் பெரும்பாலும் எடை இழப்பு.

*வெப்ப சகிப்பின்மை, அதிகரித்த வியர்வை, கைகளில் நடுக்கம்

*முடி உதிர்தல் (புருவங்கள் உட்பட)

*தைராய்டு சுரப்பியின் விரிவாக்கம் - கழுத்தின் முன்புறத்தின் வீக்கம்

*அளவில் பெரிதாகத் தோன்றும் கண்கள் மற்றும் கண் பார்வையில் கோளாறுகள்

*அதிகரித்த இதய துடிப்பு, படபடப்பு மற்றும் தூக்கமின்மை

*மூச்சுத் திணறல்

*தசை வலி மற்றும் பலவீனம், சோர்வு

*ஆஸ்டியோபோரோசிஸ் (நீண்ட காலத்திற்கு சிகிச்சையளிக்கப்படாத ஹைப்பர் தைராய்டிசத்தில்)

*மனநோய், மயக்கம், கவலை, பதட்டம், எரிச்சல், அதிவேகத்தன்மை

*பெண்களுக்கு ஒழுங்கற்ற (குறைவான) மாதவிடாய் மற்றும் மாதவிடாய் வராத நிலை.

மருத்துவம்

ஹைப்பர் தைராய்டிசத்தில் பித்தத்தை குறைத்து கபத்தை சமநிலைப்படுத்தி அக்னியின் சீற்றத்தைக் குறைத்து, உடலைத் தேற்றும் பல்யம், பிரம்மணம் மற்றும் ரசாயன சிகிச்சைகளை கொடுக்க நல்ல பலனைக் கொடுக்கும். இங்கு பஞ்சகர்ம முறைகளில் எண்ணெயுடன் கூடிய பேதியையும், எண்ணெயுடன் கூடிய பீச்சு எனும் வஸ்தியையும், மூக்கில் எண்ணெய் விடும் நசிய சிகிச்சையையும் செய்ய உடலிலுள்ள தோஷங்கள் நீங்கி வியாதி குறைவதை நாம் காணலாம்.

திக்தக நெய், சுகுமார நெய், காந்தர்வாஹஸ்தாதி எரண்ட தைலம்,  நிம்பம்ருதாதி  எரண்ட தைலம், கல்யாணக நெய், பிராமி நெய், சரஸ்வத நெய், சதாவரி நெய், க்ஷீரபலா தைலம், சியவனபிராஷ லேகியம், அஸ்வகந்த ரசாயனம், அமலகி சூரணம், அமலகி ரசாயனம், காமதூக ரசம், பிரவால பர்பம், பிரவால பஞ்சாம்ருதம், சுதசேகர ரசம், சரஸ்வதரிஷ்டம் ஆகியவை  ஹைப்பர் தைராய்டிசம் சிகிச்சையில் முக்கியமான மருந்துகள்.

மேலும்  அமுக்கிரான் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, சந்தனம், வெட்டி வேர், நெல்லிக்காய், சீந்தல் கொடி, அதிமதுரம், ஆமணக்கு வேர், நீர் பிரம்மி, மூவிலை, சிற்றாமுட்டி வேர் போன்றவையும் ஹைப்பர் தைராய்டிசத்தில் வியாதியின் குறி குணங்களுக்கு ஏற்ப கொடுக்கலாம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

Related Stories:

More
>