×

செட்டில் என் பேரு சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்

நன்றி குங்குமம் தோழி

பேபி ஜோஷிகா மாயா

முதல் காட்சியே லிஜோமோல் அம்மா, மணிகண்டன் அப்பாவோடு எலி புடிக்கிற சீன்தான் எனக்கு. அப்போ லிஜோம்மா சொன்னாங்க.. “ஏய் அல்லி ஊத்தாம்பானைய நாங்க ஊதுறதவிட நீ நல்லா ஊதுற”ன்னு. எலி இருக்க இடத்தில் குழிய தோண்டி ஊத்தாபானைக்குள்ள வைக்கோல் போட்டு பத்த வச்சா புகைய ஆரம்பிக்கும். பானைய ஊதி.. எதிர் திசையில கவரை வச்சு புடிச்சா எலி எல்லாம் மாட்டிக்கும் என சிரித்தவாறே பேசத் தொடங்கிய  குட்டி பாப்பா ஜோஷிகா மாயா, ஜெய்பீம் படத்தில் ஆரம்ப காட்சியில் தொடங்கி இறுதிவரையும் இருளர் குழந்தை அல்லியாகவே படம் நெடுக வாழ்ந்தவர்.

இப்பவும் என்னை அல்லின்னுதான் எல்லோரும் கூப்புடுறாங்க என்ற ஜோஷிகா, டிக்டாக் ஆப்பில் காமெடியில் தன் அப்பாவுடன் அதகளம் செய்தவர். டிக்டாக் க்ளோஸ் ஆகும்போது எனக்கு 1 மில்லியனுக்கு மேல பாலோவர்ஸ் இருந்தாங்க என்றவரிடம் எப்படி நடிப்புல இப்படி  என்றதற்கு? சின்ன வயசுல ஒரு முறை ரியலா அழுகுற மாதிரி நடிச்சு என் அம்மாவையே ஏமாத்திட்டேன். அம்மாவும் நான் உண்மையா அழுகுறேன்னு நம்பிட்டாங்க. அப்பதான் எனக்குள்ள நடிக்கிற திறமை இருக்குறத அப்பா கண்டுபிடிச்சு டிக்டாக் மூலம் என்னை வெளியில் கொண்டு வந்தாரு.

என் உடம்பு ரொம்ப குட்டி என்பதால், டிரஸ் சட்டுன்னு செட்டாகாது. வடிவேல் அங்கிள் டயலாக்குனா காஸ்டியூமிற்கு லுங்கி இருக்கனும், லூசா டவுசர் இருக்கனும் என்று சிரித்தவர், அப்பாவோட டவுசரை எடுத்து பின்னாடி டைட் பண்ணி, லுங்கிய பாதியா கிழிச்சு, பனியனையும் அழுக்காக்கி, நானும் அப்பாவும் சேர்ந்து டிக்டாக்கில் செம ரகளை பண்ணுவோம் எனச் சிரித்தவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷ் அங்கிள் ‘‘டிக்டாக்கில் நடிச்ச குட்டி பொண்ணு சூட்டிங் வந்துருக்காளாமே, எல்லோரும் அவள பத்தியே சொல்றாங்க. எங்கன்னு” என்னைத் தேடி வந்து பார்த்து, “உன் டிக்டாக் எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும். சூப்பரா  பண்ணுவ. பிகில் படத்துல வரும் அந்த ராயப்பன் டயலாக் பண்ணிகாட்டுன்னு” கேட்டு ரசிச்சு பார்த்தாரு.

டிக்டாக்கில் பார்த்துதான் என்னை ஆடிசன் கூப்புட்டாங்க. படத்தில் சூர்யா அங்கிள் நடிக்கப் போறாருன்னு தெரியாமலே நானும் அப்பாவும் ஆடிசன் போனோம். 100 குழந்தைகள்வரை ஆடிசன் எடுத்து ரிஜெக்டான நிலையில் நான் செலக்டானேன். ஆடிசன்ல “உங்க அம்மாவ போலீஸ் அடிக்கிறாங்க. நீ அழுகுற சீன்னு” கேமரா மேன் அங்கிள் சொல்ல, அசால்டா ஆடிசனக் கொடுத்துட்டு வந்துட்டேன். அடுத்து டைரக்டர் அங்கிள் என்னை வரவழைச்சு பார்த்தார்.

“அம்மா, அப்பாவோட சண்டையால் நீ ஹோம் வொர்க் பண்ணீட்டு வரலை. நான்தான் மிஸ். என்னை எப்படி கன்வின்ஸ் பண்ணுவ பண்ணுன்னு” சொன்னார். டைரக்டர் அங்கிள் மிஸ் மாதிரி என்னை கேள்வி கேட்க.. நான் அழுதுக்கிட்டே பதில் சொல்ல.. என் பெர்ஃபார்மென்ஸ் பார்த்த கேமராமேன் அங்கிள் டைரக்டர் அங்கிளிடம்  “இவ உண்மை பேசுறாலா நடிக்கிறாலான்னு வீட்டுல எப்படி இவளை கண்டுபிடிக்கிறாங்க”ன்னு ஆச்சரியத்தோட சொன்னாரு என அவரை மாதிரியே பேசிக் காட்டியவரிடம் இருந்து அடுத்தடுத்து காமெடி ஆக்‌ஷன் காட்சிகள் இயல்பாக வருகின்றன.

அந்த ஊருல இருக்குற இருளர்கள் எப்பவுமே கண்ணை சிமிட்டாமல் முழிச்சு பார்த்தபடியே இருப்பாங்க. அங்க புட்லின்னு ஒரு குட்டி தம்பி இருந்தான். அவனும் அப்படித்தான் பார்ப்பான். நானும் அவனைமாதிரியே கண்ணை சிமிட்டாமலே படம் முழுக்க நடிச்சேன். அதுக்கு எனக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. அதேபோல செருப்பு போடாமலே நடப்பாங்க. முள்ளு குத்துனாக்கூட தூக்கி போட்டு போயிக்கிட்டே இருப்பாங்க. நானும் செருப்பே போடலை என்றவரிடம், உனக்கு முள்ளு குத்தலையா என்றதற்கு, காட்டுல போயி முள்ளு குத்தாமலா? என சட்டென பதில் வருகிறது ஜோஷிகாவிடம் இருந்து.

எனக்கு மேக்கப் போட்டதுக்கு அப்புறம் நானான்னு எனக்கே சந்தேகமா வந்துச்சு. மேக்கப் மேன் சலீம் அங்கிள்தான் என்னோட மேக்கப் எல்லாம் பார்த்துக்கிட்டார். ஒரு நாள் என்னைக் காணோம்னு என் உண்மையான அம்மாவும் அப்பாவும் ரொம்ப நேரம் தேடித் தேடி, இருளர் மக்களுக்கு நடுவில் இருந்து, யாரை தேடுறீங்கன்னு நான் அப்பாவிடம் கேட்டதுக்கு பிறகுதான் என்னையே அவுங்களுக்கு அடையாளம் தெரிஞ்சது. நான் அல்லியாவே அங்கு வாழ்ந்ததால், எனக்கு அங்கிருந்த எலி, பூச்சி, பாம்பெல்லாம் பார்த்து பயமும் இல்லை என்கிறார் கட்டை விரலை உயர்த்திக் காட்டி.

‘தலகோதும் இளங்காத்து’ பாட்டுல முள்ளுகுத்துற மாதிரி ஒரு சீன் எனக்கு. சூர்யா அங்கிளும் என்கூட இருந்தாரு. அந்த சீனை எடுக்கும்போது சிங்கிள் டேக்கில் அதை நான் ஓ.கே. பண்ணிட்டேன். நான் பெர்ஃபார்மென்ஸ் கொடுத்து முடிச்சதுமே கேமராமேன் அங்கிள் கீழ இறங்கி வந்து “ஏன்டி 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 500 ரூபாய்க்கு நடிக்கிற”ன்னு பாராட்டினார். செட்டில் நானும் கேமராமேன் கதிர் அங்கிளும் ரொம்பக் க்ளோஸ். அவர் டெய்லி எனக்கு உச்சி முத்தம் கொடுப்பார். குடுக்கலைனா குட்டி போட்ட பூனை மாதிரி அவர் பின்னாடியே சுத்துவேன். டைரக்டர் அங்கிள் மைக்கில் என்னை, “அல்லி சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்னு கூப்புடுங்க” என்றுதான் சொல்லுவார்.

லிஜோம்மாவும்.. மணிகண்டன் அப்பாவும்.. சுபத்ரா அத்தையும்.. ரொம்ப ரொம்ப நல்லவுங்க. எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணுனாங்க. குழந்தை வயிற்றில் இருக்குற மாதிரி நடிக்க லிஜோம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. லிஜோம்மா என்னை அவுங்க மடியில் எப்பவுமே உட்கார வச்சுக்கிட்டு, என் காதுல அவுங்களும், அவுங்க காதுல நானும் எதையாவது சொல்லி ரகசியம் பேசிக்குவோம் என்று ஷூட்டிங் நினைவுகளை அசைபோட்டவர், மணிகண்டன் அப்பா “வேட்டைக்காரன் பாட்டுல” எனக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்தாரு ரொம்ப ஜாலியா இருந்துச்சு என்கிறார் சிலாகித்தபடி.

சூர்யா அங்கிளும் நான் பத்திரமா இருக்கேனான்னு என்னை கவனிச்சுக்கிட்டே இருப்பாரு. பாலத்துல நான் சூர்யா அங்கிளோட நடக்குற சீன் எடுத்தப்ப செம வெயில். சீன் சரியா வரலைன்னு ரீ டேக் போனபோது  வெயில் அதிகமாயிருச்சு. என்னால அங்க செருப்பு போடாமல் நடக்க முடியல.  காலை தூக்கிவச்சு தேச்சுக்கிட்டே இருந்தேன். அதைப் பார்த்த சூர்யா அங்கிள் ஓடிவந்து என்னைத் தூக்கி மடியில் வச்சு, என் கால்களை அவரது உள்ளங்கையால் தேச்சுவிட்டுக்கிட்டே இருந்தாரு. சூர்யா அங்கிள் ரொம்ப ரொம்ப ஸ்வீட் என்றவர், “எந்தக் குழந்தை அழுதாலும் நானும் அழுதுறுவேன்.

ஆனால் போலீஸ் உன்னை புடிச்சுட்டுப் போகும்போது நீ அழுததைப் பார்த்து நான் ரொம்ப நேரம் அழுதேன்னு” ஜோதிகா ஆன்டி என்கிட்ட சொன்னாங்க. ஜெய்பீம் மூவில என் சீன் முடிஞ்சுறுச்சுனா நான் காருக்கோ கேரவனுக்கோ போகவேமாட்டேன். லிஜோம்மாவும், மணிகண்டன் அப்பாவும் எப்படி நடிக்கிறாங்கன்னு நின்னு பார்ப்பேன். டைரக்டர் அங்கிளும், கேமராமேன் அங்கிளும் ‘‘அல்லி உன் சித்தி, சித்தப்பா எங்க”ன்னு கேட்டா அது என் ரியல் அம்மா, அப்பா. நானும் அப்படித்தான் படம் முடியும்வரை, என் உண்மையான அம்மாவையும் அப்பாவையும் கூப்பிட்டேன். லிஜோம்மாவையும், மணிகண்டன் அப்பாவைதான் அப்பா, அம்மான்னு கூப்பிட்டேன்.

அதே மாதிரி சுபத்ரா அத்தை, இருட்டப்பன் மாமா, மொசக்குட்டி சித்தப்பாவையும் கூப்புட்டு பழகினேன். எனக்கு அங்க கனிஷ்கா, ஹாசினி, தேவசேனா, சச்சு, புட்லின்னு நிறைய ஃப்ரெண்ட்ஸ். இப்பவும் மொபைல் கிடச்சா, “அல்லி எப்படி இருக்கன்னு” வாய்ஸ் மெசேஜ் அனுப்புறாங்க. என்னோட ஒரிஜினல் அம்மா, அப்பாவை மாமா அத்தைன்னுதான் கூப்புடுவாங்க.

மணிகண்டன் அப்பா இறந்துட்டதா கோர்ட்டுல சொல்லுற சீன் எடுக்கும்போது 3 மணி நேரமா சாப்புடாமல், தண்ணி குடிக்காமல்,ஜூஸ் குடிக்காமல் அப்படியே சோகமாகவே இருந்தேன். எப்படி இவ இப்படி டெடிகேட்டா இருக்கான்னு எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க. என் நடிப்பை பார்த்து செட்டில் இருந்த எல்லோரும் அப்படியே ஷாக் ஆனாங்க.  க்ளிசரின் போடாமலே எப்படி இப்படி பெர்ஃபார்ம் பண்றன்னு கேட்டாங்க? என்றவரிடம், எப்படி இப்படி ரியலா நடிக்கிற என நாமும் கேட்க?  நான் ஜாலிக்காக அப்பாவோட வெளியில போறதவிட ஆக்டிங் கத்துக்கிறதுக்காகவே நிறைய வெளியில போவேன். அப்போது வெளியில நடக்குற எல்லாத்தையும் அப்படியே அப்சர்வ் செய்து, வீட்டுல வந்து நடிச்சுக் காட்டுவேன். அதுதான் எனக்கு சூப்பரா ஆக்டிங் வருது’’ என்றவாறு விடைபெற்றார்.

ஜோஷிகாவின் பெற்றோர்…

நானும் சின்னத்திரை தொடர்கள், ஒரு சில படங்கள் என நடித்திருக்கிறேன். எங்கள் மகள் ஜோஷிகா வீட்டிலும் இப்படியேதான் காமெடி கலந்து பேசுவாள். குழந்தையில் விளையாடும்போதே வடிவேல் காமெடிய பேசி விளையாடினாள். அவள் திறமைய கேட்ச் பண்ணி டிக்டாக் ஆப் மூலமாக  3 வயதில் ஸ்டார்ட் செய்தோம். எல்லா காமெடி ஆக்டரையும் ட்ரை பண்ணினாலும், அவளோட வடிவேல் அங்கிள் காமெடி ரொம்பவே ஹிட்டாச்சு. சிலர் கமெண்டில், பாப்பா உன் வீடியோ பார்த்துதான் என் கஷ்டத்த மறந்து சிரிப்பேன்னு போடுவாங்க. ஜெய்பீம் படத்தில் ஓப்பனிங் சீனே இவளை வைத்துதான்.

குருவிக்கு தீனி வைக்கிறமாதிரி ஓப்பன் செய்து சூர்யா சாரோட கோர்ட் சீன்வரை படம் முழுவதும் இருப்பாள். லிஜோமோல் மேம் படத்தில் என்ன பண்றாங்களோ அந்த மூடை படத்தில் ஜோஷிகாவும் அப்படியே கேரி பண்ணணும். கொஞ்சம் விளையாட்டு மூடில் இருந்தாலோ, பெர்ஃபார்மென்ஸ் வைஸ் சொதப்புனாலோ லிஜோ மேம் கொடுக்குற ஆக்டிங் பெர்ஃபார்மென்ஸ் அத்தனையும் வேஸ்டாயிடும். இதையெல்லாம் பீல்டுல மானிடரில் செக் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. ஜோஷிகாவும் சூப்பரா பண்ணுனா.

செஞ்சியில அஞ்சான்சேரிங்கிற கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு முழுக்கவே இருளர் மக்கள்தான். சுடுகாட்டைத் தாண்டிதான் அவுங்க குடிசைகளே இருக்கு. அவர்களுக்கு கரண்ட் இல்லை. தண்ணீ இல்லை. இரவில் பாம்பு வந்தாலும் தெரியாது. செட் லைட்டை ஆஃப் பண்ணீட்டா பக்கத்துல யார் இருக்கான்னே தெரியாது. பயிற்சி எடுக்கும்போதும், படப்பிடிப்பு முழுவதும் ஜோஷிகாவும் தொடர்ந்து அங்கதான் அவர்களோடு தங்கினாள். நடிப்பு பயிற்சிக்காக அந்த மக்களோடு சேர்ந்து வேட்டைக்கு போனாள். எலி பிடித்தாள். இருளர் மக்கள் ரொம்ப ரொம்ப அன்பானவங்க. நல்லவுங்க. ‘நம்ம அல்லி அம்மா நடிக்கிறாங்க வாங்க பார்க்கலாம்’னு எல்லோரும் ஷூட்டிங் பார்க்க வந்துருவாங்க.

இருளர் குழந்தைகள் அவர்களாக விளையாடும்போது சந்தோசமாக விளையாடுவாங்க. ஜோஷிகாவை மட்டும் விளையாட சேர்த்துக்க மாட்டாங்க. அவ கிட்டப் போனாலே தள்ளிப் போயிருவாங்க. சாப்பிட எது கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க. ‘ஏன் என்னை விளையாட சேர்க்க மாட்டேங்குறீங்க’ன்னு ஜோஷிகா கேட்டதற்கு? “இந்த ஊர்ல யாரும் எங்களை மதிக்க மாட்டாங்க. நாங்க வந்தாலே தள்ளிப்போயிருவாங்க. நீங்களும் அப்படித்தானே இருப்பீங்கன்னு நாங்க பேசலைன்னு” சொன்னாங்கலாம். ஆனால் ஜோஷிகா அவர்களோடு விடாமல் பழகியதும், அந்தக் குழந்தைகளும் உயிரா பழக ஆரம்பிச்சுட்டாங்க. இப்பவும் அவர்கள் நட்பு தொடருது.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Tags :
× RELATED உடல்... மனம்... ஆன்மா...