‘MA English Chaiwalai’

நன்றி குங்குமம் தோழி

ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் முடித்து, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எந்த தொழிலாக இருந்தாலும் கடின உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் போதும் என டீ கடையைத் திறந்திருக்கிறார் கொல்கத்தாவிற்கு அருகேயுள்ள ஹாப்ரா என்ற இடத்தைச் சேர்ந்த டுக்டுகி தாஸ். தனது டீ கடைக்கு ‘MA English Chaiwali’ என அவர் வைத்தப் பெயர்தான் நாடு முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது .

‘‘எனது அப்பாவும் சிறு தொழில் வியாபாரிதான். நாங்கள் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது மளிகை வியாபாரம் செய்து வருகிறார். பொதுவாகவே மிடில் க்ளாஸ் குடும்பங்களைப் போல, படித்து முடித்ததும் ஒரு அரசாங்க வேலையோ அல்லது படிப்பிற்கு ஏற்ற வேலையில் ஈடுபட வேண்டும்ன்னு தான் எல்லாருடைய இலக்காக இருக்கும். நடுத்தர குடும்பத்திற்கு சொந்தமா தொழில் செய்யணும் என்பது ஒரு கனவாகவே இருக்கும்.

எங்க வீட்டில் சின்னதா ஒரு தொழில் செய்தாலும், அதனால் ஏற்படும் நஷ்டம் என்ன என்று தெரியும் என்பதால் அப்பா அம்மாவிற்கு நான் படித்து ஒரு ஆசிரியராக வேண்டும் என்று தான் நினைத்தார்கள். ஆனால், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தொடங்கி எனது அப்பாவும் அவருக்குத் துணையாக என் அம்மாவும் பல வியாபாரங்கள் செய்து வந்தனர்.

நாங்களும் அப்பாவிற்கு வியாபாரத்தில் உதவியா இருப்போம். வியாபாரங்களில் பல ஏற்றத்தாழ்வுகள் வரும். சில சமயம் கையில் பணமே இருக்காது. சில சமயம் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல லாபம் இருக்கும். இப்படி வியாபாரத்தில் எதிர்பாராத பல திருப்பங்களை சந்திப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அப்பா வியாபாரம் செய்து பார்த்து வளர்ந்த எனக்கும் ஏதாவது ஒரு வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.

2020ல் கொரோனா லாக்டவுனில் என் முதுகலைப் பட்டத்தை முடித்தேன். என் பெற்றோருக்கு நான் ஒரு நல்ல வேலைக்கு போகணும்ன்னு விருப்பம். அவர்களின் திருப்திக்காக நான் வேலையை தேடினாலும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. ஒரு கட்டத்தில் என் பெற்றோரும் அதை உணர்ந்தாங்க. உனக்கு சொந்தமா தொழில் செய்யணும்ன்னா செய்ன்னு அவங்களின் ஆதரவை கொடுத்தாங்க. உடனே என் நண்பர்களுடன் சேர்ந்து என்ன தொழில் தொடங்கலாம் என ஆராயத் தொடங்கினேன். இப்போது ஆன்லைன் வியாபாரங்கள் பல பிரபலமாகி வந்தாலும், எனக்கு நேரடியாக வாடிக்கையாளர்களை சந்தித்து முழுமையாகத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று தோன்றியது.

இதனிடையே பல தொழில்முனைவோர்களின் வெற்றிக் கதைகளையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் படித்தேன். ஒவ்வொரு கதையும் ஒரு புதிய கண்ணோட்டம் மற்றும் உத்வேகத்தை கொடுத்தது.அப்போது ஒரு நாள், யுடியூபில், ’எம்,பி.ஏ சாய்வாலா’ என்பவரின் கதையைப் பார்த்தேன். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பிரபுல் பில்லூர் என்பவர் தனது எம்.பி.ஏ படிப்பை பாதியிலேயே விட்டு டீ கடையை தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் பல தடைகளை சந்தித்தாலும், இப்போது 3 கோடி வருமானம் ஈட்டிவருகிறார். அதில் கிடைத்த தூண்டுதல் மூலம், டீ கடை திறக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான முதலீடும் குறைவாகவே இருந்ததால், உடனே டீ கடை ஆரம்பிக்கும் பணியில் இறங்கினேன்.

டீ கடை ஆரம்பிக்கும் போது அதை கல்லூரிகள், மருத்துவமனை அல்லது ரயில் நிலையத்தின் அருகில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். கொரோனா சமயத்தில் கல்லூரிகள் மூடியிருந்ததால், அடுத்ததாக மருத்துவமனைகளின் அருகில் இடங்களை தேடினேன். அதுவும் சரியாக அமையவில்லை. எனவே ஹாப்ரா ரயில் நிலையத்தை தேர்வு செய்தேன்.

நவம்பர் 1, 2021ல் ‘MA English Chaiwali’ பெயரில் டீ கடையை தொடங்கினேன்.

முதல் நாள் என்பதால் காலை 9-11 அனைவருக்கும் இலவச டீயை அறிவித்தோம். ஆனால் அனைவருமே பணம் கொடுத்து டீ அருந்தினார்கள். அன்று முதல் இன்று வரை நான் டீ கடையில் நிற்கும் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு மகிழ்ச்சிதான். வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் என ஒரு முறை வந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் என் கடையை தேடி வந்து டீ அருந்துகிறார்கள். அதுவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஏலக்காய் டீ, இஞ்சி டீ, ஏலக்காய் - இலவங்கம் டீ, குங்குமப்பூ டீ, சாக்லேட் டீ, டார்ஜ்லிங் டீ மற்றும் ப்ளேக் டீ... பல வகை டீ வெரைட்டிகளுடன் காபியும் வழங்குகிறேன். இது தவிர பிஸ்கெட்ஸ், சமோசாவுடன் மேற்கு வங்கத்தின் ஸ்பெஷல் சட்னியும் உண்டு. பலர் அந்த சட்னிக்காகவே டீயுடன் சமோசாவும் வாங்கி சாப்பிடுறாங்க.

எல்லாமே என்னுடைய தயாரிப்பு தான். உடன் உதவி செய்ய ஒருத்தர் இருக்கார். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து டீ கடைக்கு வந்திடுவேன். 11 மணி வரை வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும். 11 மணிக்கு மேல் கடையை மூடிடு வேன். மறுபடியும் மாலை 3 மணிக்கு ரயில் நிலையம் வந்தால் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் கடையை மூட முடியும். சிலர் முதுகலை பட்டம் முடித்து டீ கடை போடுவதா என்கிறார்கள்.

ஆனால் நமக்கு பிடித்த வேலையை மனமாறச் செய்யும் போதுதானே வெற்றியடைய முடியும். இன்று நாடு முழுவதும் இது போலச் சிறுதொழில் செய்பவர்கள் பலரும் நன்கு படித்தவர்கள்தான். எந்த வேலையாக இருந்தாலும், அதை விடா முயற்சியுடன் புதுமையான முறையில் அணுகினால், நிச்சயம் வெற்றி கிட்டும்” என்கிறார் டுக்டுகி.கொல்கத்தாவிற்கு செல்லும் நம் வாசகர்கள், ஹப்ரா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் இரண்டில் டுக்டுகியின் சுடச்சுட டீயையும், ஸ்பெஷல் சட்னி-சமோசாவையும் ருசிக்க தவறாதீர்கள்.  

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

More
>