வெளித்தெரியா வேர்கள்-டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

நன்றி குங்குமம் தோழி

அது 1913ம் ஆண்டு. தன்னைப் பெண் பார்க்க வந்த மணமகனிடம், ‘‘வீட்டில் உங்களுக்கு சமமான மரியாதையை எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பங்களுக்கு நீங்கள் குறுக்கே நிற்கக் கூடாது” என்ற நிபந்தனைகளை ஏற்ற பிறகே தன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட புதுமைப்பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.1886 ஜூலை 30, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கல்வி ஆலோசகரும், கல்லூரி பேராசிரியருமான நாராயணசாமி மற்றும் சந்திரம்மாள் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தவர் இந்த முத்துலட்சுமி. பிராமணரான தந்தை, தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த தாயாரை அக்காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள் அவரைத் தள்ளி வைத்துவிட, அம்மாவின் சகோதரிகள் மட்டுமே உறவினர்களாக இருந்தனர் முத்துலட்சுமியின் குடும்பத்தினருக்கு..

தந்தை பி.ஏ. பட்டதாரி என்பதால், தனது குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சிறுவயது முதலே அறிவுறுத்தினார். எப்போதும் படிப்பு, புத்தகம் என்றிருந்த முத்துலட்சுமி மெட்ரிக் படிப்பை 1902ல் முதல் நிலையில் முடிக்க, அவருக்குத் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்தார் தாய். அதேசமயம் மகளை கல்லூரியில் சேர்த்திட விளைந்தார் தந்தை. கல்வியின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட முத்துலட்சுமி, தனது சிறுவயது ஆஸ்துமா மற்றும் கண்நோயைக் காரணம் காட்டி தாயின் திருமண ஏற்பாட்டிலிருந்து தப்பித்தாலும் தந்தையின் ஆசைப்படி புதுக்கோட்டை மகாராஜா

கல்லூரியிலேயே படிக்கச் சேர்ந்தார்.

கல்லூரிகளில் பெண்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் முத்துலட்சுமிக்கு உதவிக்கரம் நீட்டிய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மகாராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் நல்லாதரவுடன், கல்லூரி முதல்வரும் மற்ற பேராசிரியர்களும் வியக்கும் வண்ணம் அதீத ஆங்கிலப் புலமையுடன் தனது 20 வயதில் பி.ஏ தேறினார். தனது ஆஸ்துமாவுக்கும், தாயாரின் காய்ச்சலுக்கும் சிகிச்சையளித்த புதுக்கோட்டை வாழ் அமெரிக்க மருத்துவர் டாக்டர் வான் ஏலன் அவர்களால் ஈர்க்கப்பட்ட முத்துலட்சுமி, தானும் மருத்துவம் கற்க விரும்பினார்.

ஆனால் அவரது தாயாரோ, இப்போதும் மகளுக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் ஒரு தேவதாசிப் பெண்ணான அவருக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என் பயப்பட, தனது மகள் படிப்பது மட்டும்தான் இதிலிருந்து அவருக்கு விடுதலையளிக்கும் என்று நம்பிய அவரின் தந்தை, முத்து லெட்சுமியை அழைத்துக் கொண்டு 1907ம் ஆண்டு சென்னைக்குப் புறப்பட்டதோடு தனது பழைய மாணவர் சீனிவாசராவ் உதவியுடன் மகளை எம்.எம்.சி மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் பயிலச் சேர்த்தார். முத்துலட்சுமியின் மருத்துவக் கல்விக்கென புதுக்கோட்டை அரசு, வருடத்திற்கு 180 ரூபாய் நிதியுதவி வழங்க, அதை வைத்துப் படிக்க ஆரம்பித்தார்.

கல்லூரிக் காலத்தில் அறிமுகமான டாக்டர் நஞ்சுண்டராவ் எனும் தேசியவாதியின் மூலமாக பாரதியார், அன்னி பெசன்ட் அம்மையார் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோரைத் தெரிந்து கொண்ட முத்துலட்சுமி, பல அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு தனது அரசியல் அறிவை விரிவாக்கிக் கொண்டதோடு, தானும் அரசியல் மேடைகளில் பேசத் தொடங்கினார்.. என்னதான் அரசியல் ஈடுபாடு இருந்தாலும், தான் மிகவும் நேசித்த மருத்துவத்திலும் 1912ம் ஆண்டு தேர்ந்து வெளிவந்த முத்துலட்சுமி, தென்னிந்தியாவிலேயே எம்.பி மற்றும் ஜி.எம் மருத்துவப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்குரியவரானார்.

அதிலும் முத்துலட்சுமியின் இறுதியாண்டு தேர்வைப் பற்றி குறிப்பிடும் பேராசிரியர் டாக்டர் சார்லஸ் டோனவான், ‘‘மெல்லிய தேகத்துடன் பெரிய கண்ணாடி அணிந்து உள்ளே நுழைந்த ஒரு பெண், கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுபோல வெடித்தார். ஆண்கள் மட்டுமே நிரம்பியிருந்த கல்லூரியில் அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளி 100% மதிப்பெண்களைப் பெற்று, கல்லூரியிலேயே முதல் மாணவியாகத் திகழ்ந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய பத்திரிகைகளும், அரசியல் பிரமுகர்களும் வெற்றியைக் கொண்டாட, முத்துலட்சுமி தமிழகம் முழுவதும் தெரிந்தவரானார்.

மருத்துவத்தில் பட்டம் பெற்றபின், தனது ஹவுஸ் சர்ஜன் பயிற்சியை எழும்பூர் பெண்கள் மருத்துவமனையில் தொடர்ந்த முத்துலட்சுமி, கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவையரின் அமைப்புகளுடன் இணைந்து மருத்துவ சேவை புரிந்தார். தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து அழைப்பு வந்தபோதிலும், தனது கல்விக்கு மூலாதாரமாக விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குத் திரும்பி அங்கும் ஓராண்டு காலம் மருத்துவராகப் பணியாற்றி தனது நன்றிக்கடனை செலுத்தியதோடு, தனது தம்பி, தங்கைகள் கல்வியில் சிறக்கவும் உதவினார் டாக்டர் முத்துலட்சுமி.

1913ம் ஆண்டு புதுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பிய முத்துலட்சுமி, அங்கேயே கிளினிக் ஒன்றை தொடங்கி நோயாளி களுக்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் நடந்ததுதான், ‘டாக்டர் முத்துலட்சுமி-டாக்டர் சுந்தர ரெட்டி’யின் முன்னர் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன்கூடிய எளிய திருமணம். லண்டனில் எஃப்.ஆர்.சி.எஸ் பயின்று, அறுவை சிகிச்சை நிபுணராக கிங்ஜார்ஜ் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த டாக்டர் சுந்தர ரெட்டி, திருமணத்திற்குப் பின், தான் கொடுத்த உறுதிக்கேற்ப நடந்து காட்டவும் செய்தார்.

தாய்மையுற்ற டாக்டர் முத்துலட்சுமி, ஏற்கனவே இருந்த ஆஸ்துமா மற்றும் மற்ற உடல் உபாதைகளுடன், சிக்கலான பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில்,  தாய்சேய் இருவரையும் காப்பாற்றியது அன்று மகப்பேறு மருத்துவத்தில் சிறந்து விளங்கி அனைவராலும் போற்றப்படும் டாக்டர் ஏ.எல். முதலியார்தான்.

சிக்கலான பிரசவம் என்றாலும், பிரசவித்தவுடனே தனது பணிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயமும் இருந்தது அவருக்கு. ஒருசமயம், ஒரே மாதம் நிரம்பிய மகனை வீட்டில் விட்டுவிட்டு வேலையினை முடிக்க வேண்டியிருந்தது. வேலை முடித்து திரும்பியபோது தனது மகன் பசியால் அழுது தூங்கியிருப்பதைக் கண்டு கண்கலங்கிய டாக்டர் முத்துலட்சுமி, ‘‘மருத்துவத் துறையைச் சார்ந்த பெண்கள், திருமணம் எனும் பந்தத்தில் சிக்காமல் இருப்பது நல்லது” என்றும் குறிப்பிட்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. முதலில் பிறந்த டாக்டர் முத்துலட்சுமியின் முதல் மகனான ராம்மோகன்தான் பின்னாளில் பிரதமரின் திட்டக்குழு இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

பிள்ளைப்பேறுக்குப் பிறகு, பெற்றோர் மற்றும் தனது சகோதர சகோதரிகள் அனைவரையும் சென்னைக்கு அழைத்துக்கொள்ள தனது வருமானம் போதுமானதாயில்லை என்று இன்னும் கடினமாக உழைத்திருக்கிறார் முத்துலட்சுமி. 1919ல் இரண்டாவது முறையாக கருத்தரித்த டாக்டர் முத்துலட்சுமி, தான் திட்டமிடப்படாத அந்த கர்ப்பத்தை பெரும் சிரமத்துடன் எதிர்கொண்டார். அப்படிப் பிறந்த குழந்தைதான், பின்னாளில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராகப் பொறுப்பேற்று, அரிய பணியாற்றிய டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

இரண்டாவது குழந்தை பிறந்த அதே ஆண்டில் தாயாரின் மரணம், தமக்கை சுந்தராம்பாளுக்கு குடல் புற்றுநோய், முதல் மகனுக்கு கக்குவான் நோய் என குடும்ப அழுத்தங்கள் அவருக்குக் கூடிக்கொண்டே போயின. சகோதரியை அழைத்துக் கொண்டு, கல்கத்தாவிற்கும், ராஞ்சிக்கும் கதிரியக்கச் சிகிச்சைக்காக ஓடிய முத்துலட்சுமி, ஒருகட்டத்தில் தங்கையின் நீங்காத வலியைப் போக்க, அவருக்கு மார்ஃபீன் போன்ற போதை ஊசியைப் பயன்படுத்தினார். என்றாலும் மிகுந்த வலியுடன் 1923ம் ஆண்டு இளவயதில் தமக்கை மரணமடைய, முத்துலட்சுமிக்குள் ஏற்பட்ட அந்த வடுதான், பின்னாளில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையாக உயிர்கொண்டது.

1925ம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நோய்களுக்கான மருத்துவ ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற, அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வரான பனகல் அரசர் முன்னெடுப்பில் அரசு அவரை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தது. மிகுந்த தயக்கத்துடன், தனது குடும்பத்துடன் வெளிநாடு பயணம் மேற்கொண்ட டாக்டர் முத்துலட்சுமி, தனது ஒரே சகோதரரின் அகால மரணம் தந்த சோகத்தையும் மீறி அங்கு தொற்றுநோய் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிகளில் தன்னை  ஈடுபடுத்திக் கொண்டார்.

அப்போது பாரிஸ் நகரில் நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டில், இந்தியாவின் சார்பாக டாக்டர் முத்துலட்சுமிக்கு பேசும் வாய்ப்பு கிடைக்க, ‘‘பெண்களை சக்தி என்பார்கள். கடவுளே ஆனாலும் சக்தி இல்லாமல் இருக்க முடியாது. இயங்கவும் முடியாது” என்றவர், இந்தியப் பெண்கள் முன்னேற்றத்திற்காகத் தான் பணியாற்றப் போவதாகவும் பேசினார்.தாயகம் திரும்பியவுடன், பேசியபடியே, தனது மருத்துவப் பணிகளுக்கிடையே தேவதாசி ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு ஆகியவற்றைக் கையிலெடுக்க, பல எதிர்ப்புகளுக்கிடையே அதைத் தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தவரை காந்தியடிகளும், கஸ்தூரிபாயும் நேரடியாக சந்தித்து பாராட்டைத் தெரிவித்திருக்கின்றனர்.

அதேசமயம் 1927ம் ஆண்டு நடந்த தேர்தலில், சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஏற்புரையில், ‘‘உலக அரங்கில் இந்திய நாடு மேன்மை அடைய வேண்டுமென்றால், பெண்களுக்கு கல்வியும், மற்ற உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்” என்று பேசியது இன்றும் நினைவுகூரப்படுகிறது. தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்ட முத்துலட்சுமி, சட்டசபையில் பாவலர் சத்தியமூர்த்தி உள்பட பலரது எதிர்ப்புகளுக்கும் ஆளானார் என்றாலும் பின்னாளில் அதில் வெற்றியும் பெற்றார்..

அரசியலில் ஈடுபட்டிருந்தபோதே, மருத்துவத்துறையில் பல மேம்பாடுகளைச் செய்தார். பெண் மருத்துவர்கள் நியமனம், பெண் சுகாதார ஊழியர்கள் நியமனம், பள்ளிகளில் மாணவியருக்கு உடல் பரிசோதனைகள் ஆகியவற்றைத் தொடங்கினார். இரண்டு ஆதரவற்ற தேவதாசி பெண்களுக்கு புகலிடம் மறுக்கப்பட, அவர்களைத் தற்காலிகமாக தன்னுடன் வைத்துக் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி. பின்னாளில் அந்த தேவதாசிப் பெண்கள் இருவரும் ஆசிரியராகவும், செவிலியராகவும் தேர்ச்சியடைந்து இவருக்கு பெருமை சேர்த்தனர். ஆதரவற்ற பெண்களுக்காகவே ‘‘அவ்வை இல்லம்” என்ற காப்பகத்தையும் தொடங்கினார்.

உப்பு சத்தியாகிரகத்தின்போது, காந்தியடிகளின் கைதை எதிர்த்து தனது சட்டசபை பதவியை ராஜினாமா செய்த டாக்டர் முத்துலட்சுமி, அதன்பிறகு விடுதலை இயக்கத்தில் முழுநேரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1940ல், தந்தையின் மரணமும், 1943ல் காதல் கணவரின் மரணமும் டாக்டர் முத்துலட்சுமியை நிலைகுலையச் செய்தது என்றாலும், எப்போதும் போல மீண்டும் உயிர்த்தெழுந்தார்.

இருந்தாலும் தங்கையின் புற்றுநோய் மரணம் ஏற்படுத்திய தாக்கம் குறையாத நிலையில், புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவமனை என்பது அவரின் வாழ்நாள் லட்சியமாகவே இருந்திருக்கிறது. அதற்காகவே தனது சொத்துகளையும், ஒரே வாகனத்தையும் விற்று மருத்துவம் பயின்ற தனது இரண்டாவது மகனை, மேற்படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

தனது தாயின் அதிரடி அணுகுமுறையை ‘‘ஆபரேஷன் கேன்சர்” என அழைக்கும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, புற்றுநோய் சிகிச்சையில் மேற்படிப்பு முடித்து சில ஆண்டுகள் இங்கிலாந்தில் பணிபுரிய எண்ணிய நிலையில், ‘‘தாயின் உடல்நிலை கவலைக்கிடம்” என்ற தந்தியை டாக்டர் முத்துலட்சுமியே அனுப்பி, தன்னை இந்தியாவிற்கு வரவழைத்ததை நினைவு கூறுகிறார் முத்துலட்சுமியின் மருத்துவர் மகன். அதீத முயற்சிகளோடு 1952ல் தாயும்-மகனும் தொடங்கிய சிறிய மருத்துவமனைதான் பின்னாளில் அடையாறு கேன்சர் மருத்துவமனையாகி, டாக்டர் சாந்தா அவர்களால் மேம்படுத்தப்பட்டு, இன்றும்  சிறந்து விளங்குகிறது..

1956ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு, அவரது சமூகப்பணிகளுக்காக பத்மபூஷன் விருதை இந்திய அரசு வழங்கிச் சிறப்பித்தது. தனது வாழ்க்கையை சுயசரிதையாகவும், சட்டசபையில் நிகழ்ந்தவற்றை அனுபவங்களாகவும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி எழுத, அந்தப் புத்தகங்கள் இன்றும் பலருக்கு ஊக்கமளித்து வருகிறது. 1968ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி, தனது 81ம் வயதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இயற்கை எய்தியபோது, அப்போதைய பாரதப் பிரதமரான இந்திரா காந்தி, தனது இரங்கல் செய்தியில், ‘‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற பெண்கள் இல்லையென்றால் இப்போது பெண்கள் அடைந்திருக்கும் உயரிய நிலைகளும், உயர் பதவிகளும் வாய்த்திருக்காது” என்று குறிப்பிட்டார்.

உண்மையும் அதுதானே!எல்லாம் சரி. ஏன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி எனும் வெளிச்ச வேர், இந்த வெளித்தெரியா வேர்கள் தொடரில் நிறைவு நாயகியாக வலம்வர வேண்டும் என்றால், தொடரில் இதுவரை நாம் கண்ட பெண்களின் உழைப்பையும், திறமையையும், நேர்மையையும் உள்ளடக்கிய வேர் என்பதாலேயே.!இந்த வேர்கள் அனைத்தும் இன்னும் பலருக்கு ஊக்கத்தை அளிக்கட்டும்.. மாற்றத்தை நிகழ்த்தட்டும்..!

(நிறைவு!)

Related Stories:

More
>