Back to SCHOOL

நன்றி குங்குமம் தோழி

கொரோனா ஊரடங்கு, தீபாவளி, புயல், வெள்ளம் என விடுமுறைகள் முடிந்து சுமார் இரண்டாண்டுகளுக்குப் பின், மீண்டும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். வர்க் ஃப்ரம் ஹோம் முடிந்து அலுவலகத்திற்கு திரும்பிய பெரியவர்களே அந்த மாற்றத்தைக் கையாளமுடியாமல் தவித்த போது, குழந்தைகளுக்கும் அதே பிரச்சனை இருக்கத்தானே செய்யும்.குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு திரும்பினாலும், நண்பர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து உட்கார வேண்டும்.

சக மாணவர்களுடன் உணவை பகிர்ந்துகொள்ள முடியாது. வேக வேகமாக பாடங்களை படித்து முடிக்க வேண்டும். தவறவிட்ட வகுப்புகளுக்காக சனிக்கிழமையும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என அவர்களது பள்ளியும் கல்வி கற்கும் சூழலும் முற்றிலுமாக மாறியுள்ளது. இது தவிர, கொரோனா பாதிப்பால் குடும்பத்தினரை இழந்த குழந்தைகள், கொரோனா நம்மைத் தாக்கிவிடுமோ என அச்சத்திலிருக்கும் குழந்தைகள் இவர்களின் மனநிலை தற்போது மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்களை எப்படி அணுகுவது என பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் அறிவுரை வழங்குகிறார் மனநல மருத்துவர் வசந்த்.

“கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்பக் காலத்தில், குழந்தைகளுக்கு வீட்டில் எப்படி ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்று பார்த்தோம். குழந்தைகளை எலக்ட்ரானிக் கருவிகள் பயன்படுத்த அனுமதிக்காத பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் குழந்தைகளுக்கு மடிக்கணினியும், கைப்பேசியும் வாங்கிக் கொடுத்து அதில் கல்வி கற்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், மீண்டும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் தயாராக வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளின் போது, 9 மணி வகுப்புக்கு 8.45க்கு எழுந்து குழந்தைகள் பழக்கப்பட்டுவிட்டனர். வகுப்பின் போதே பல் துலக்கி, உணவு சாப்பிடுவது என அவர்களது அன்றாட பழக்கங்களை முதலில் மாற்ற வேண்டும். இப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரம் முன்பாக எழுந்து பள்ளிக்குத் தயாராக வேண்டும். இந்த மாற்றத்திற்கு பெற்றோர்கள் தான் துணையாக இருக்க வேண்டும். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த பழக்கத்தை உருவாக்குவது நல்லது.

வகுப்பில் சேட்டை செய்யக்கூடாது, மற்ற மாணவர்களிடம் பேசக் கூடாது என பள்ளி பற்றி அச்சுறுத்தலைக் குழந்தைகளின் மனதில் விதைக்காமல், பள்ளியை ஒரு பாசிடிவ் கண்ணோட்டத்தில் அவர்களுக்கு காட்டுங்கள். பள்ளியில் உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். விளையாட்டு நேரத்தில் நண்பர்களுடன் நீ மகிழ்ச்சியாக விளையாடலாம், நிறையக் கற்றுக்கொள்ளலாம் போன்ற உற்சாகமான வார்த்தைகளை கூறி அவர்களது பதட்டத்தைக் குறைக்கலாம்.

இது தவிர, கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றவும் பெற்றோர்களே குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது நல்லது. அவர்கள் பையில் கூடுதல் முகக்கவசங்களை வைக்க வேண்டும். பள்ளியில் எப்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்ற விவரங்களை அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும். மேலும், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ எனப் பயப்படும் குழந்தையிடம், உன் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார், வகுப்பில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் எனவே கொரோனா குறித்த பயம் தேவையில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த மாறுதலை சுலபமாக்க முயற்சிப்பார்கள்.

ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டால் தயங்காமல் விடுப்பு எடுத்து வீட்டில் ஆன்லைனில் வகுப்புகளைக் கற்க சொல்ல வேண்டும். முன்னெச்சரிக்கையாக அந்த குழந்தை விடுப்பு எடுப்பதன் மூலம், தன் நண்பர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை முகக் கவசம் அணிய வைப்பது ஆசிரியர்களுக்கு சவாலாகவே இருந்தாலும், அவர்கள் அதை கண்டிப்புடன் செயல்படுத்துவது அவசியம். சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதுவரை வீட்டைவிட்டே வெளியே வராமல், முதல் முறையாக பள்ளிக்குச் செல்லவிருக்கும் மழலையர்களுக்கு பள்ளி திறப்பதற்கு ஒரு வாரம் முதலே காலையில் எழுந்து பள்ளிக்குத் தயாராகும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு முறை அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வகுப்புகளை காட்டலாம். அவர்கள் அங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லித்தரலாம். இதெல்லாம், முதல் முறையாக பெற்றோரைவிட்டு புதிய மனிதர்களைச் சந்திக்கப்போகும் குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும்.

மேலும், குழந்தைகள் அன்னியர்களுடன் பழக மறுத்து அமைதியாக இருந்தால், பெற்றோர்கள் அதைக் கண்டு பதட்டப்பட தேவையில்லை. சுமார் 20 மாதங்கள் தங்கள் குடும்பத்தினரைத் தவிர வேறொருவருடனும் பழகாத குழந்தைகள், ஆரம்பத்தில் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதை தவிர்க்கலாம் அல்லது அவர்களுக்கு அது சவாலாக இருக்கலாம். கொரோனாவிற்கு முன் கலகலவென நண்பர்களுடன் சிரித்து பேசிய குழந்தைகள் இப்போது அமைதியாக இருந்தால் பயப்பட வேண்டாம். அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

அதே போல படிப்பிலும் குழந்தைகளை அவசரப்படுத்த வேண்டாம். நன்றாக படித்துக் கொண்டிருந்த குழந்தை இப்போது சரியாக படிக்கவில்லை என்றால், அவர்களுக்கு கொஞ்சம் பள்ளி வாழ்க்கைக்கு பழக நேரம் கொடுங்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா எனக் கேளுங்கள். பொதுவாக குழந்தைகள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவில் மாற்றிக்கொள்ளக் கூடியவர்கள்தான். ஆரம்பக்கால பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு அளித்தால், மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவார்கள்” என்கிறார் மனநல மருத்துவர் வசந்த்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

Related Stories:

More
>