சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்த ரூ.1,000 கோடியில் பசுமை நிதியம் உருவாக்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் நடைபெற்று வரும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2022ல் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்து பேசியதாவது:

மானுடத்தின் மிக முக்கிய பிரச்னையாக காலநிலை மாற்றம் இருக்கிறது. அதனால்தான், இந்தியாவிலேயே மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக காலநிலை மாற்ற இயக்கத்தை துவக்கி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன். அதிகமான வெயில், அதிகமான மழை, காலம் தவறி பெய்யக்கூடிய மழை, மழை பெய்யாமலே போவது, அதிகப்படியான வெப்பம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புதிய புதிய நோய்கள், உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படுவது, உணவுப்பொருள் தட்டுப்பாடு, மண் வளம் குறைதல், காற்று மாசுபடுதல் இவை அனைத்தும் அதிகமாக ஏற்படுவதை இன்று கவனித்து வருகிறோம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.  துறையின் பெயரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்று அறிவித்தோம், தமிழகத்திற்கான காலநிலை திட்டத்தை அறிவித்தோம்.

நிதிநிலை அறிக்கையில் அதற்கென  500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம், தமிழ்நாட்டுக்கு என தனியான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும்  10 கோடி ரூபாயை  ஒதுக்கி,  திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறேன்.

*பசுமை திட்டங்களுக்கான அனுமதியை இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கும் வகையில்,  தொழில்துறையில் உள்ள Guidance TN-ல் திட்டங்கள் வகுக்கப்படும். புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.

*காற்றாலைகளை புதுப்பிப்பதற்கான புதிய கொள்கைஎரிசக்தி துறையால் வெளியிடப்படும்.

*அனைத்து திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பார்வையில் பார்த்து, ஆய்வுசெய்து செயல்படுத்த இருக்கிறோம்.

*தமிழ்நாடு அரசு 1,000 கோடி ரூபாயில் பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்கட்டமாக,  நூறு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

*காலநிலை மாறுபாடு,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,  சுழற்சிப் பொருளாதாரம்,  வளங்குன்றா வளர்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்பு திட்டங்களை அறிவிக்கும்.

தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல,  சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி - தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையை கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை.

இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070ம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும். .இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ. மெய்யநாதன், இந்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவரும், பொருளாதார நிபுணருமான மான்டேக் சிங் அலுவாலியா, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் எரிக் சோல்ஹிம், மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையத் முஜம்மில் அப்பாஸ், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் திட்ட இயக்குநர், தீபக் பில்கி, காலநிலை மாற்றத்துறை வல்லுநர்கள், பூவுலக நண்பர்கள் சுந்தர்ராஜன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: