×

அறிமுக சுழல் அப்ரார்: 7 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

முல்தான்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், அறிமுக வீரர் அப்ரார் அகமதுவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 281 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. பாகிஸ்தான் அணியில் 24 வயது இளம் ஸ்பின்னர் அப்ரார் அகமது அறிமுகமானார்.

கிராவ்லி, டக்கெட் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். கிராவ்லி 19 ரன் எடுத்து அப்ரார் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் (ஓவர் 8.5) ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த டக்கெட் 63 ரன், போப் 60 ரன் எடுத்து அப்ரார் சுழலில் மூழ்க, அடுத்து வந்தவர்களும் அறிமுக வீரரின் ‘லெக்பிரேக் கூக்ளி’ மாயாஜாலத்தை சமாளிக்க முடியாமல் விக்கெட் தானம் செய்தனர்.

இங்கிலாந்து அணியின் முதல் 7 பேட்ஸ்மேன்களும் அப்ரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஸ்டோக்ஸ் 30, வில் ஜாக்ஸ் 31, மார்க் வுட் 36* ரன் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இங்கிலாந்து 51.4 ஓவரிலேயே 281 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. பாக். பந்துவீச்சில் அப்ரார் 22 ஓவரில் 1 மெய்டன் உள்பட 114 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். ஸாகித் மகமூத் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முகமது ஸாகித் (1996, 7-66), முகமது நசீர் (1969, 7-99) ஆகியோரைத் தொடர்ந்து, அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட் வீழ்த்திய 3வது பாக். வீரர் என்ற பெருமை அப்ராருக்கு கிடைத்துள்ளது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்துள்ளது. இமாம் 0, அப்துல்லா 14 ரன்னில் வெளியேறினர். கேப்டன் பாபர் 61 ரன், சாத் ஷகீல் 32 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Abrar , Debut spin Abrar: Fantastic with 7 wickets
× RELATED அறிமுக சுழல் அப்ரார்: 7 விக்கெட் வீழ்த்தி அசத்தல்